மதுரை கிளையில் இருந்து உயர் நீதிமன்ற நீதிபதியான 3-வது பெண் வழக்கறிஞர்

119 0

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து நீதிபதியான 3-வது பெண் வழக்கறிஞர் எல்.விக்டோரியா கவுரி.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பணிபுரிந்தவர் எல்.விக்டோரியா கவுரி. இவர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீதிபதி எல்.விக்டோரியா கவுரி, குமரி மாவட்டம் மேற்கு நெய்யூரில் 1973-ல் பிறந்தார். மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் படித்து 1995-ல் வழக்கறிஞராக பதிவு செய்தார். இவரது கணவர் துளசி முத்துராமன். 2 மகள்கள் உள்ளனர். நாகர்கோவில் பார்வதிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். உயர் நீதிமன்ற கிளையில் நீதிமன்ற கிளையில் 6 ஆண்டுகள் மத்திய அரசு வழக்கறிஞராக பணிபுரிந்தார். 8.9.2020 முதல் உயர் நீதிமன்ற கிளையில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பணிபுரிந்து வந்தார்.

மதுரையில் சென்னை உயர் நீதிமன்ற கிளை: 2004-ல் மதுரையில் சென்னை உயர் நீதிமன்ற கிளை தொடங்கப்பட்டது. இதையடுத்து உயர் நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டனர். மதுரை கிளையிலிருந்து முதலில் நீதிபதியானவர் டி.ஜோதிமணி, அடுத்து ஆர்.எஸ்.ராமநாதன், எஸ்.நாகமுத்து ஆகியோர் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டனர்.

இவர்களை தொடர்ந்து மதுரை கிளையிலிருந்து நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஜெ.நிஷாபாணு, ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.புகழேந்தி, எஸ்.ஸ்ரீமதி, ஆர்.விஜயகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது எல்.விக்டோரியா கவுரி, கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் நீதிபதிகளாகியுள்ளனர். உயர் நீதிமன்ற கிளையில் இருந்து 11 வழக்கறிஞர்கள் நீதிபதிகளாகியுள்ளனர். உயர் நீதிமன்ற நீதிபதியான மதுரை கிளை 3-வது பெண் வழக்கறிஞராக விக்டோரியா கவுரி உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் 75 நீதிபதி பணியிடங்கள் உள்ளன. பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தலைமையில் 52 நீதிபதிகள் இருந்தனர். விக்டோரியா கவுரி உட்பட 5 புதிய நீதிபதிகள் திங்கட்கிழமை நியமிக்கப்பட்டனர். இதையடுத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 57 ஆக உயர்ந்துள்ளது. பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 11-ல் இருந்து 14 ஆக உயர்ந்துள்ளது.18 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளது