விவசாயத்துறை மற்றும் உணவுபாதுகாப்புசார் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் இலங்கைக்குக் கைகொடுக்கும் நோக்கில் உரம் மற்றும் விதைகளைக் கொள்வனவு செய்வதற்கும் பின்தங்கிய நிலையிலுள்ள விவசாயிகளுக்கு அவசியமான பயிற்சிகளை வழங்குவதற்கும் ஐரோப்பிய ஒன்றியம் 4 மில்லியன் யூரோ நிதியுதவியை வழங்கியுள்ளது.
இந்நிதியுதவியானது இலங்கையிலுள்ள உணவு மற்றும் விவசாய அமைப்பிடம் வழங்கிவைக்கப்பட்டிருப்பதுடன், அவ்வமைப்பின் ஊடாக உரிய தரப்பினருக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
‘அண்மையகாலங்களில் நாடு முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது விவசாயிகளை, குறிப்பாக சிறிய பரப்பளவு நிலங்களில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளை வெகுவாகப் பாதித்துள்ளது.
அவர்கள் கடந்த இரு போகங்களிலும் உரம் மற்றும் பயிர்ச்செய்கைக்கு அவசியமான ஏனைய பொருட்களுக்கு நிலவிய தட்டுப்பாட்டின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டனர்.
இது அவர்களின் வருமான வீழ்ச்சிக்கும், உணவு உள்ளிட்ட அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்துகொள்வதற்கான அவர்களின் இயலுமையில் தாக்கம் ஏற்படுவதற்கும் வழிவகுத்தது’ என்று உணவு மற்றும் விவசாய அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
அதேவேளை இந்நிதியுதவி வழங்கல் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் டெனிஸ் சாய்பி கூறியிருப்பதாவது:
‘இந்நிதியுதவியை வழங்குவது குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன். உணவுத்தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுக்கும் அதேவேளை, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில் இலங்கையின் விவசாயத்துறையை மீண்டும் பழையநிலைக்குக் கொண்டுவருவதற்கு உதவும் நோக்கில் நாம் உணவு மற்றும் விவசாய அமைப்புடன் கைகோர்த்திருக்கின்றோம்.
இதனூடாக உரம் உள்ளடங்கலாக விவசாயத்துறையின் மேம்பாட்டுக்கு அவசியமான பொருட்களை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதேபோன்று குறைந்தளவிலான வளங்களைப் பயன்படுத்தி எவ்வாறு செயற்திறன்மிக்க பயிர்ச்செய்கையை மேற்கொள்ளமுடியும் என்பது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம்.
இவற்றின் மூலம் இலங்கையில் நிலைபேறானதும், மீண்டெழக்கூடியதும், செயற்திறன் வாய்ந்ததுமான விவசாயத்துறையைக் கட்டியெழுப்பமுடியும் என்று நம்புகின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.
அதேபோன்று ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்டுள்ள இந்நிதியுதவி தொடர்பில் தமது வரவேற்பை வெளியிட்டுள்ள உணவு மற்றும் விவசாய அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி விமலேந்திர ஷரண், நாடளாவிய ரீதியில் வலுவான விவசாய செயன்முறையைக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக அமையக்கூடிய இந்த செயற்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதை முன்னிறுத்தி தாம் விவசாயத்துறை மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சுக்களுடன் நெருங்கிப்பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இச்செயற்திட்டத்தின் ஊடாக பொலனறுவை, பதுளை, அம்பாறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலுள்ள 41,000 விவசாயிகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.