ஜனாதிபதியால் 243 காணிகள் விடுவிப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இராணுவத்தினர் இன்றுவரை பின்னடித்து வருகிறார்கள் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
வவுனியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனைத் தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,உக்கிரம் கொண்ட தமிழர் விடுதலைப் போராட்டம் முள்ளிவாய்க்கால் மண்ணில் மையம் கொண்டு கரையேறிய நிலமாகிய கேப்பாப்புலவு இன்று அகிம்சைப் போராட்டமாக மீண்டும் வெடித்துள்ளது.
இந்த போராட்டங்கள் இரு மையங்களில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கேப்பாப்புலவு, புதுக்குடியிருப்பு என இரு மண்மீட்புப் போர்களும் மக்களால் அகிம்சை ரீதியில் மேற்கொள்ளப்படுகிறது.புதுக்குடியிருப்பில் ஒரு தொகுதியினர் சுழற்சி முறையிலான தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பில் தொடர் சத்தியாக்கிரக போராட்டத்தினை முன்னெடுத்து வருகிறார்கள்.இதில் இரு பிரதேசங்களின் மண்மீட்புப் போர் சம்மந்தப்பட்டிருக்கிறது. புதுக்குடியிருப்பில் 19 ஏக்கர் காணிகள்.
இது 49 பேருக்குரிய பரம்பரைக் காணிகள். அம்மக்களின் நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பது மட்டுமல்லாமல், அங்கிருக்கும் இராணுவ முகாமால் பாடசாலை மாணவர்கள் மீதான பகிடிவதைகள், பாலியல் சேட்டைகள், சிகரட் வியாபாரம் போன்றவை நடைபெறுகிறது.
இவை எமது கலாச்சாரத்தை கெடுத்து வருகிறது. இதை எதிர்த்து 2000 பேர் வரையிலான மாணவர்கள் ஒன்று சேர்ந்து புதுக்குடியிருப்பில் பாரிய போராட்டம் ஒன்றையும் நடத்தியிருந்தார்கள்.அதேபோல், கேப்பாப்புலவு நிலத்தில் ஒட்டுமொத்தமான கிராமத்தையே இராணுவம் ஆக்கிரமித்து வைத்துள்ளது.600 ஏக்கருக்கு மேற்பட்ட பொதுமக்களின் காணிகள் அங்கு சுவீகரிக்கப்பட்டுள்ளது. சில சில காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.
இறுதியாக ஜனாதிபதியால் 243 காணிகள் விடுவிப்பதாக வாக்குறுதிகள் வழங்கப்பட்டும் அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இராணுவத்தினர் இன்றுவரை பின்னடித்து வருகிறார்கள். அதை எதிர்த்து இந்த மக்கள் கேப்பாப்புலவில் இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
ஆகவே, புதுக்குடியிருப்பு மற்றும் கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு ஆகிய இந்த இரண்டு பிரதேசங்களின் போராட்டங்களின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் என அவர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.மேலும், இந்த இரண்டு பிரதேசங்களும் விடுவிக்கப்பட வேண்டும். அதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு ஓரிரு தினங்களுக்குள் விடுவிக்கப்படா விட்டால் அவை பாரிய வெகுஜனப் போராட்டங்களாக மாறும் என சிவமோகன் இதன் போது சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.