ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகமும், உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவருமான பான் கீ மூன், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை புதன்கிழமை (08) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
பாராளுமன்றத்துக்கு வருகை தந்த பான் கீ மூனை, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோர் வரவேற்றனர்.
உலகளாவிய பசுமை வளர்ச்சி நிறுவனத்தின் தலைவர் என்ற ரீதியில் பான் கி மூன், பசுமை அபிவிருத்தி, நிலைபேறான அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தியிருந்ததுடன், கார்பன் வெளியீட்டைக் குறைத்து நிலைபேறான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பப் புதிய கூட்டாண்மைகளை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டினார்.
அரசியலில் கொள்கைகள் வகுக்கப்படும்போது பசுமை வளர்ச்சிக்கான மாதிரியொன்று அடையாளம் காணப்பட வேண்டும் என்றும், அதற்குத் தேவையான குரல் பாராளுமன்றத்தின் ஊடாக எழுப்பப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் துறையுடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மத்தியில் விரிவான விளிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தைக் சுட்டிக்காட்டிய சபாநாயகர், இந்த இலக்கை அடைவதற்குத் தான் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பினைத் தொடர்ந்து பான் கி மூன், இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் வூன்ஜின் ஜியோங் மற்றும் GGGI இன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஃபிராங்க் ரிஜ்ஸ்பெர்மேன் உள்ளிட்ட தூதுக் குழுவினர் பாராளுமன்ற சபா மண்டபத்தைப் பார்வையிட்டனர்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் கௌரவ அஜித் ராஜபக்ஷ, சுற்றாடல் அமைச்சர் கௌரவ நசீர் அஹமட், ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் தினேஷ் வீரகொடி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க ஆகியோரும் கலந்துகொண்டனர்.