அனைவரையும் உள்ளடக்கிய, பன்முகத்தன்மைவாய்ந்த, அமைதியான இலங்கையைக் கட்டியெழுப்பக்கூடிய சமூக – பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை உடனடியாக மேற்கொள்ளும் அதேவேளை, நாட்டிற்கு அவசியமான ஆழமான ஜனநாயக மறுசீரமைப்புக்களைக் கொண்டுவருவதற்கான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய விரிவான ஜனநாயகக்கூட்டிணைவை உருவாக்குவதும் இன்றியமையாததாகும் என்று சிவில் சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய ‘அனைவருக்கும் நீதி’ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
சிவில் சமூக மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்களான ஏ.எம்.பாயிஸ், பவானி பொன்சேகா, இரா.சாணக்கியன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் ஜயதேவ உயன்கொட ஆகியோரை உள்ளடக்கிய ‘அனைவருக்கும் நீதி’ என்ற அமைப்பினால் ‘மதிப்பீடு மற்றும் மறுசீரமைப்பைப் பிரதிபலிக்கும் சுதந்திரதினம்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
இலங்கை அதன் 75 ஆவது சுதந்திரதினத்தைக் கொண்டாடும் வேளையில் மிகமோசமான பொருளாதார நெருக்கடியின் விளைவாக சுமார் 9 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வறுமைக்குள் வீழ்ந்திருப்பதுடன் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பின்மைக்கும் 56,000 சிறுவர்கள் மந்தபோசணைக் குறைபாட்டுக்கும் முகங்கொடுத்துள்ளனர். இவற்றுடன் அத்தியாவசியப்பொருட்களுக்கான தட்டுப்பாடு, அதிகரித்துவரும் பொருட்களின் விலைகள் மற்றும் தொடர்ச்சியான மின்வெட்டு என்பன பின்தங்கிய நிலையிலுள்ள சமூகங்களை வெகுவாகப் பாதித்திருப்பதுடன் இலங்கையில் தீவிரமடைந்துவரும் சமத்துவமின்மையை நன்கு வெளிப்படுத்தியுள்ளன.
இலங்கையர்கள் பாரிய சவால்களுக்கு முகங்கொடுத்திருக்கும் சூழ்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் சுமார் 200 மில்லியன் ரூபா செலவில் சுதந்திரதின நிகழ்வுகளை நடாத்தியிருக்கின்றது. இந்தச் செலவினங்களை உள்ளுராட்சிமன்றத்தேர்தலை நடாத்துவதற்கு போதியளவு நிதி இல்லை என்று கூறுகின்ற அரசாங்கத்தின் கூற்றுடன் ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.
அதேபோன்று இலங்கை மீண்டும் புதுப்பிக்கட்ட அடக்குமுறையைக் கொண்டுவந்திருக்கின்றது. கடந்த 4 ஆம் திகதி கொழும்பில் அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகப்போராட்டத்தைக் கலைப்பதற்குப் பொலிஸாரால் வலுவான நடவடிக்கைகள் பிரயோகிக்கப்பட்டதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்படுவதைத் தடுப்பதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய உத்திகள் இலங்கைக்குப் புதிதல்ல. வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களும், சிறுபான்மையினத்தவரும், அரசியல் ரீதியான விமர்சகர்களும் பல தசாப்தகாலமாக இத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொண்டுவருகின்றனர். இலங்கையின் ஒடுக்குமுறை வரலாற்றுக்கு மத்தியில் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்று சில மாதகாலத்தில் அமைதிவழிப்போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள், போராட்டக்காரர்களை இலக்குவைக்கும் விதத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்தடைச்சட்டம் ஆகியவற்றின் பயன்பாடு, கொழும்பில் ‘உயர் பாதுகாப்பு வலய’ உருவாக்கம், மீறல்கள் மற்றும் கண்காணிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக புதியதொரு பரிமாணத்திலான ஒடுக்குமுறைகளுக்கு இலங்கை முகங்கொடுத்தது.
நாட்டில் அரசியல் மறுசீரமைப்பும், கட்டமைப்பு ரீதியான மாற்றமும் அவசியமென பொதுமக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து வலியுறுத்திவருகின்றபோதிலும் தற்போதைய புதிய ஜனாதிபதியின் கீழும் ஏகாதிபத்தியவாத, இராணுவமயப்படுத்தப்பட்ட ஆட்சிநிர்வாகம் தொடர்கின்றது. இந்தப் போக்கு ஆட்சிநிர்வாகத்தில் நிலவும் நெருக்கடி, தரமான அரசியல் மீதான மக்களின் நம்பிக்கை வீழ்ச்சி போன்றவற்றை மேலும் தீவிரப்படுத்தும். எனவே மக்களின் கோரிக்கைகளைப் பிரதிபலிக்கக்கூடியவாறான கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.
இவ்வாறானதொரு பின்னணியில் அனைவரையும் உள்ளடக்கிய, பன்முகத்தன்மைவாய்ந்த, அமைதியான இலங்கையைக் கட்டியெழுப்பக்கூடிய சமூக – பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை உடனடியாக மேற்கொள்ளவேண்டியது அவசியமாகின்றது. அதேபோன்று நாட்டிற்கு அவசியமான ஆழமான ஜனநாயக மறுசீரமைப்புக்களைக் கொண்டுவருவதற்கான தலைமைத்துவத்தை வழங்கக்கூடிய விரிவான ஜனநாயகக்கூட்டிணைவை உருவாக்குவதும் இன்றியமையாததாகக் காணப்படுகின்றது என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.