தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னணிப் பாடகர் எஸ்.ஜி.சாந்தனின் அஞ்சலி நிகழ்வு இன்று மாங்குளத்தில் இடம்பெறவுள்ளது.
ஈழத்தின் தலைசிறந்த பாடகர் சாந்தன் தனது ஐம்பத்தேழாவது வயதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.
சிறுநீரகங்கள் இரண்டும் செயலிழந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு வந்தநிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவரது பூதவுடல் நேற்று மாலை முதல் இன்று காலை வரை யாழ்ப்பாணம் – ஓட்டுமடம் அந்தியகால சேவை நிலையத்தில் வைக்கப்பட்டு, இன்று மாங்குளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
இன்றையதினம் மாங்குளத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று, பூதவுடல் இன்று மாலை கிளிநொச்சி விவேகானந்தநகரில் அமைந்துள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்படவுள்ளதுடன், நாளை செவ்வாய்க்கிழமை இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெறவுள்ளது.
சிறந்த பாடகரான நாடகக் கலைஞர் எஸ்.ஜி.சாந்தன், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பிரதான பாடகராக விளங்கினார்.
1995 ஆம் ஆண்டு வரை யாழ்ப்பாணத்தின் பிரபல நட்சத்திரப் பாடகராக விளங்கிய இவர், சிறந்த நடிகராகவும் திகழ்ந்தார்.