அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் முதலில் தமிழ் தலைமைகள் ஒருமித்த இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ் தலைமைகள் மத்தியில் ஒற்றுமை கிடையாது, இதுவே அரசியல் தீர்வு இழுபறிக்கு பிரதான காரணியாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வாகவே அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் ஊடாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் உரிமை மாகாண சபை தேர்தல் ஊடாக பாதுகாக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் அந்த உரிமையையையும் பறித்துக் கொண்டது.
மாகாண சபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொறுப்புக் கூற வேண்டும்.
நாடு வங்குரோத்து நிலை அடைந்துள்ள பின்னணியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர்த்து ஏனைய அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்க கூடாது என மகாசங்கத்தினர் உட்பட பெரும்பாலான தரப்பினர் கடுமையாக வலியுறுத்துகிறார்கள்.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்க பகிர்ந்தளிக்கும் போது நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் தோற்றம் பெறும்.
அதிகாரங்கள் பகிரப்படாத நிலையிலும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் அரசியல் பரிந்துரைகளின் பிரகாரம் நியமிக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது.
பொலிஸ் மற்றும் காணி அதிகாரம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு அல்ல எந்த மாகாணங்களுக்கும் பகிர்ந்தளிக்க கூடாது.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேவையில்லாத பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளார்.
அதிகார பகிர்வு விவகாரத்தில் தெற்கு அரசியல்வாதிகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வருவதற்கு முன்னர் தமிழ் தலைமைகள் நடைமுறைக்கு சாத்தியமான ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.
அதிகார பகிர்வு விவகாரத்தில் தமிழ் தலைமைகள் மத்தியில் காணப்படும் கருத்து மற்றும் கொள்கை வேறுபாடுகள் அதிகார பகிர்வு விவகாரம் காலம் காலமாக இழுபறி நிலையில் இருக்க ஏதுவான காரணியாக உள்ளது.
அதிகாரத்தை பகிர்ந்தளிக்க நான் தயாராக இருந்தேன் ,அதிகார பகிர்வு விவகாரத்தில் தமிழ் தலைமைகள் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் அறிவிப்பார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமாயின் மக்கள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.13 ஆவது திருத்தம் தொடர்பில் அரசியல் தரப்பு எடுக்கும் தீர்மானம் சிறந்ததாக அமையாது, முரண்பாடுகளை மாத்திரம் தோற்றுவிக்கும் என்றார்.