தேர்தலுக்கு முன் பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் மாற்றம்!

150 0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினரின் பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்குட்படுத்துவோம்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படும்  என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான பிரசார கூட்டங்களை ஆரம்பித்துள்ளோம். கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.

தேர்தலை கண்டு அச்சமடைய வேண்டிய தேவை எமக்கு இல்லை.வெற்றியோ,தோல்வியோ தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவோம்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் இதுவரை உறுதியான தீர்மானம் ஏதும் எட்டப்படவில்லை.

300 இற்கும் அதிகமாக தேர்தல் தொகுதிகளில் பொதுஜன பெரமுனவை முன்னிலைப்படுத்தி மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவோம்.

வடக்கு மாகாணத்தில் வீணை சின்னத்திலும், கிழக்கு மாகாணத்தில் படகு சின்னத்திலும் போட்டியிடுவோம்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவானவர்கள் தான் தற்போது பொதுஜன பெரமுனவிற்கு எதிராக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்.

பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்திற்கு தெரிவாகி,தற்போது கட்சியின் கொள்கைக்கு எதிராக செயற்படும் தரப்பினரது பாராளுமன்ற உறுப்புரிமையை சவாலுக்கு உட்படுத்துவோம். குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இவர்கள் 69 இலட்ச மக்களாணையை காட்டிக் கொடுத்தார்கள்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படுகிறார்.பொதுஜன பெரமுனவின் அடிப்படை கொள்கைக்கு எதிராக செயற்படுகிறார். இவருக்கு எதிராக கடும் நடவடிக்கை கட்சி மட்டத்தில் எடுக்கப்படும்.

இடம்பெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு முன்னர் பொதுஜன பெரமுனவின் முக்கிய பதவிகள் மறுசீரமைக்கப்படும்.கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு முக்கிய பதவிகள் வழங்கப்படும் என்றார்.