யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த கோரி நடைபெறவுள்ள பேரணியில் அனைவரையும் அணி திரளுமாறு வவுனியா மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் நாளைய தினம் வவுனியாவில் நடத்தப்படவிருக்கும் பேரணிக்கு வவுனியா மாவட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி தமது முழு ஆதரவினையும் வழங்கியுள்ளது.
இதேவேளை இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,
இன்று வவுனியா வளாகமானது சுயமாக தனித்துவமாகவும் வன்னிப் பெருநிலப்பரப்பின் தலை சிறந்த ஓர் பல்கலைக்கழகமாக மிளிர வேண்டியது அவசியமே.
தமிழனின் அழியாச் சொத்தாக என்றும் இருப்பது கல்வியே. எனவே வவுனியா வளாகமானது வன்னிப்பல்கலைக்களகமாக மாற்றப்படவேண்டும் என்பதே அனைவரினதும் கோரிக்கையாகும்.
எனவே இதற்காக அனைவரும் ஒன்றிணைந்து ஓர் அமைதிப் பேரணியை நடாத்த இருப்பதனால் அனைவரும் இதில் கலந்து கொண்டு எமது உணர்வுகளையும் வன்னிக்கென தனியொரு பல்கலைக்கழகம் அமைய வேண்டுமென்பதில் நாம் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது.
எமது எதிர்காலத்தினுடைய சந்ததிகள் இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று உலகின் தலை சிறந்தவர்ககளாக வரவேண்டும் என்பதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகவும் வேண்டுதலாகவும் இருக்கின்றது.
ஆகவே, 28.02.2017 அன்று காலை 10.00 மணிக்கு வவுனியா குருமன்காட்டிலிருந்து ஆரம்பமாகும் கோரிக்கை பேரணியில் வன்னியைச் சேர்ந்த அனைத்து மாணவர்கள் மற்றும் முன்னைய, இன்நாள் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் சமுதாயத்தினர், பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் இதில் தவறாது கலந்து கொள்ளவும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவினை வழங்கி நிற்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.