பங்களாதேஷுக்கு மீளச்செலுத்தவேண்டிய 200 மில்லியன் டொலர் கடனை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் செலுத்துவதற்கு இலங்கை எதிர்பார்த்திருப்பதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமீன் தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை ஓரளவிற்கு மீட்சியடைந்துவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘இப்போது இலங்கை ஓரளவிற்கு நல்ல நிலையில் இருப்பதுடன், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடைந்து வருகின்றது.
அவர்கள் கடனை மீளச்செலுத்துவதற்கு நாம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கியிருக்கின்றோம்’ என்று ஞாயிற்றுக்கிழமை (5) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்துள்ள பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர், அக்காலப்பகுதிக்குள் இலங்கை கடனை மீளச்செலுத்தும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வில் பங்கேற்றதன் பின்னர் ஞாயிறன்று மீண்டும் நாடு திரும்பிய அமைச்சர் அப்துல் மொமீன், இலங்கையின் புதிய அரசாங்கம் ஓரளவிற்கு சிறந்த முறையில் நாட்டை நிர்வகிப்பதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியடையமுடியும் என்றும், அதற்கு ஆதரவளிக்கக்கூடியவகையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிட்டும் என்றும் இலங்கை அரசாங்கம் நம்பிக்கைகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், பங்களாதேஷின் உதவி குறித்து இலங்கை நன்றியை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷிடம் பெற்ற 200 மில்லியன் டொலர் கடனை மீளச்செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கையை அடுத்து, அதனை எதிர்வரும் 6 மாதகாலத்திற்கு நீடிப்பதாக பங்களாதேஷ் ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.