பிரபல பின்னணி பாடகர் வாணி ஜெயராம் சென்னையில் உள்ள அவரது வீட்டில் பிப்ரவரி 4 இல் காலமானார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, இந்தி, என 19க்கும் அதிகமான மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார்
1000-க்கும் அதிகமான படங்களில் 10,000-க்கு அதிகமான பாடல்களை பாடியுள்ளார் .
சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 3 முறை வென்றவர். தமிழகம், ஆந்திரா, குஜராத், ஒடிசா மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றவர்.
‘ஏழு சுவரங்களுக்குள் எத்தனை பாடல்’, ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’, ‘மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலரல்லவோ’, ‘என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்’,‘நீ கேட்டால் நான் மாட்டேன் என்றா சொல்வேன்’, ‘ஏபிசி நீ வாசி’ உள்ளிட்ட பல்வேறு தமிழ் பாடல்களில் ரசிகர்களின் நெஞ்சை அள்ளியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைதிப்படை என்ற போர்வையில் ஈழ மண்ணை ஆக்கிரமித்த இந்தியப்படை தனது கொலை வெறித் தாண்டவத்தை ஈழ மண்ணில் நிகழ்த்தியது.
இந்திய வல்லாதிக்க வெறிக்குள் சிக்கி சீரழித்த ஈழத்தமிழினம் தனக்கு ஆறுதல் தேடி நின்ற வேளை. இசை ஒரு மருந்தானது.
“ வீசும் காற்றே தூது செல்லு தமிழ் நாட்டில் எழுந்து ஒரு செய்தி சொல்லு…” என்ற வாணி ஜெயராமின் குரலின் பாடல் ஈழ மக்களுக்கு ஓர் உளவளத்துணையானது.
வீரம், காதல் தமிழரின் இரு கண்கள் அந்த கண்களின் காதலை “தென்னம் கீற்றில் தென்றல் வந்து மோதும் என் தேசம் எங்கும் குண்டு வந்து வீழும் கன்னி மனம் மெல்ல மெல்ல மாறும் அவள் கையில் கூட ஆயுதங்கள் ஏறும்..! ” என தன் காந்த குரலால் பாடி பல இளைஞர்களையும் யுவதிகளையும் பாசறைநோக்கி பயணிக்க வைத்தார். இசை என்பது சமூகத்தை இணைக்கிற நல்லதொரு பாலம் என்பதை நிருபித்தார் இசை மேதை வாணி ஜெயராம்.
தியாகி திலீபனின் உண்ணாவிரத நாட்களை ”பாடும் பறவைகள் வாருங்கள் புலி வீரன் திலீபனை பாடுங்கள்” ….என தன் குரலால் வரலாற்றை பதிவு செய்துள்ளார்.
தமிழின் மகத்தான பின்னணி பாடகரான வாணி ஜெயராம் மறைவுக்கு ஈழத்தமிழினம் தலைவணங்கி நிற்கின்றது. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் உண்டோ அத்தனையும் பாடி நம்மையெல்லாம் மகிழ்வித்த இசைக்குயில் வாணி ஜெயராமின் ஆன்மா அமைதி பெற வேண்டுகிறோம்.