யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு நோக்கி நகரும் வடக்கு, கிழக்கு எழுச்சிப் பேரணி, இன்று வெருகலைச் சென்றடைந்தது.
இலங்கையின் 75ஆவது சுதந்திர தினம் கடந்த 4ஆம் திகதி பெரும்பான்மை இனத்தினரால் கொண்டாடப்பட்டிருந்த நிலையில், வடக்கு, கிழக்கெங்கும் குறித்த நாள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு, ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது.அத்துடன் அன்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட மக்கள் பேரெழுச்சிப் பேரணி அன்று மாலை கிளிநொச்சியைச் சென்றடைந்தது.
பேரணியின் இரண்டாம் நாளான நேற்று கிளிநொச்சி பரந்தன் சந்தியிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி, வாகனப் பேரணியாகவும், நடைபவனியாகவும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சென்றடைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நிறைவுபெற்றது.
தொடர்ந்து 3ஆம் நாளான இன்று முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து கிழக்கு நோக்கிப் புறப்பட்ட பேரணி திருகோணமலையைச் சென்றடைந்து அங்கிருந்து வெருகல் பகுதியைச் சேர்ந்தது.வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பயணிக்கும் பேரணியில் பங்கேற்றவர்கள், வெருகல் பிரதேசம் செல்லும் வழியில் குமாரபுரம் படுகொலை நினைவேந்தலை அனுஸ்டித்தனர்.
இம் மக்கள் எழுச்சிப் பேரணியானது நாளை மட்டக்களப்பைச் சென்றடைந்து நிறைவடையவுள்ளது.பேரணியில் மதத் தலைவர்கள், காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் பங்கேற்றுள்ளனர்.