இந்நாட்டில் முதலீடுகளை ஊக்குவிப்பதில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் முதலீடுகளுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நிலையத்தை அமைப்பது பற்றி இலங்கையின் வணிக தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வு செய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழுவில் கலந்துரையாடப்பட்டது.
´இலங்கையின் வணிகத் தொழில்முயற்சிகளை இலகுபடுத்தும் சுட்டெண்ணின் பெறுமானத்தை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்களையும் சிரமங்களையும் ஆய்வுசெய்வதற்கும் அது தொடர்பில் முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்குமான பாராளுமன்ற விசேட குழு´ அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) மதுர விதானகே தலைமையில் அண்மையில் (01) பாராளுமன்றத்தில் கூடிய போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில், இலங்கை வணிக சபை, கொழும்புப் பங்குப் பரிவர்த்தனை, தேசிய ஏற்றுமதியாளர்களின் சபை, மற்றும் இலங்கை வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இந்தப் பிரதிநிதிகள் இந்நாட்டில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான தமது முன்மொழிவுகளை குழுவுக்கு அறிவுறுத்தியதுடன், அரச மற்றும் தனியார் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் முதலீடுகளுக்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுக்கொள்வதற்கு ஒரு நிலையத்தை அமைப்பது முக்கியமானது என அவர்களின் கருத்தாக இருந்தது.
இது தொடர்பில் இதற்கு முன்னரும் குழுவுக்கு முன்மொழிவு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்த குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே, இது தொடர்பில் ஜனாதிபதியை அறிவுறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டார்.
அதேபோன்று அரச நிறுவனங்களை மீள் கட்டமைப்பு செய்வதன் அவசியம் தொடர்பிலும் வருகை தந்தவர்கள் சுட்டிக்காட்டியதுடன், அது தொடர்பில் அந்தந்தத் துறை சார்ந்த தொழில்வாண்மையாளர்களின் கருத்துக்கள் முக்கியமானது என பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.
அதனால் ஊடகங்கள் மூலமாகவும் இது தொடர்பில் விளிப்பூட்டுவது அவசியம் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், நாடுகளை தரவரிசைப்படுத்தும் போது இலங்கை உள்ள நிலை முதலீட்டுக்கு தாக்கம் செலுத்துவதாகவும், இந்தத் தரப்படுத்தலில் முன்னிலைக்கு வருவதன் தேவை குறித்தும் வருகை தந்த பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.
அதேபோன்று இந்நாட்டின் சந்தையின் அளவு மற்றும் தரம் என்பவற்றை விருத்தி செய்வதன் அவசியம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.