ஆஸ்திரேலியாவில் டால்பின்களுடன் நீந்த ஆற்றில் குதித்த சிறுமி… அடுத்து நடந்த பயங்கரம்

135 0

ஆஸ்திரேலியாவின் பெர்த் புறநகர்ப் பகுதியில் ஸ்வான் நதி உள்ளது. மிகவும் அழகாக காட்சியளிக்கும் இந்த நதியில் பொழுதுபோக்கிற்காக மக்கள் படகு சவாரி செய்வதும், ஜெட் ஸ்கி எனப்படும் வாகனத்தில் பயணிப்பதும் வழக்கம்.

ஆர்வ மிகுதியில் சிலர் நதியில் குதித்து நீந்தி மகிழ்வார்கள். இந்நிலையில், ஸ்வான் நதியில் இன்று நீந்திக்கொண்டிருந்த 16 வயது சிறுமியை, திடீரென பாய்ந்து வந்த சுறா ஒன்று கடித்துள்ளது. பலத்த காயமடைந்த சிறுமியை மீட்புக்குழுவினர் தண்ணீரில் இருந்து மீட்டனர்.

அவருக்கு முதலுதவி அளித்து காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால், சிறிது நேரத்தில் அந்த சிறுமி உயிரிழந்துவிட்டார்.

தோழிகள் கண்முன்னே நடந்த இந்த பயங்கர சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி பால் ராபின்சன் கூறுகையில், ‘அந்த சிறுமி தோழிகளுடன் ஜெட் ஸ்கி வாகனத்தில் சென்றபோது, டால்பின்கள் அருகே நீந்துவதற்காக நதியில் குதித்திருக்கலாம்’ என்றார். சிறுமி இறந்த தகவல் கேட்டு அவரது குடும்பத்தினர் மிகவும் உடைந்துவிட்டதாகவும் அவர் கூறினார். இந்த நதியின் ஒரு பகுதியில் சில சமயங்களில் சுறா தென்படுவதாக மீன்வள வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நதியில் பயணிக்கும் மக்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அரசு எச்சரித்துள்ளது.