சிறுபான்மையினரை இலக்கு வைக்கும் சஜித், அநுர

184 0

உள்ளூராட்சி சபைகளுக்குரிய தேர்தல் நடைபெறுவதில் அரசியல் கட்சிகளுக்கு இடையே மாறுபட்ட கருத்துக்கள் உள்ள போதிலும் தேர்தலில் போட்டியிடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அவை செய்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் கடந்த 20 வருடங்களின் பின்னர் பேரினவாத தேசிய கட்சிகள் கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் தமிழ் முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவை பெற்றுக் கொள்வதற்காக கிழக்கு மாகாணத்தில் உள்ள பல உள்ளூராட்சி சபைகளில் தனித்துப் போட்டியிடுகின்றன. சில உள்ளூராட்சி சபைகளில் பிரதேச மட்டத்தில் செல்வாக்கு பெற்றுள்ள தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடன் இணைந்தும் போட்டியிடுகின்றன.

ஐக்கிய மக்கள் சக்தி அம்பாறை மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் தனித்தும் ஒரு சில கட்சிகளுடன் இணைந்தும் போட்டியிடுகின்றது. தமது கட்சிக்கான ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி இருந்தார்.

இதன்போது அக்கரைப்பற்று, சம்மாந்துறை ஆகிய இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பெருமளவு பொதுமக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. அக்கரைப்பற்றி மாநகரசபை மற்றும் பிரதேச சபை தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய காங்கிரஸின் தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வின் செல்வாக்கை முறியடிப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸம், அகில இலங்கை மக்கள் காங்கிரசும் இன்னும் சில அமைப்புகளும் இணைந்து தராசு சின்னத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அக்கரைப்பற்று மாநகர சபைக்கும், அக்கரைப்பற்று பிரதேச சபைக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தனித்துப் போட்டியின்றமை அக்கட்சி தமிழ் முஸ்லிம் பிரதேசங்களிலே காலூன்றுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை உணர முடிகின்றது. இதேபோன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை பிரதேச சபை உள்ளிட்ட அனைத்து உள்ளுராட்சி சபைகளிலும் தனித்துப் போட்டியிடுகின்றன. ஐக்கிய மக்கள் சக்தியின் அக்கரைப்பற்று பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் மழையையும் பாராது கூட்டத்தில் கலந்து கொண்டமை கவனத்திற்குரியது.

பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய மக்கள் சக்தி தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க முஸ்லிம் பிரதேசங்களில் குறிப்பாக நிந்தவூர், இறக்காமம், சம்மாந்துறை, சாய்ந்தமருது ஒலுவில் ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

மேற்படி பிரதேசங்களில் நடைபெற்ற கூட்டங்களில் அவருடைய கருத்துக்களை கேட்பதற்கு பெருமளவிலான பொதுமக்கள் கலந்து கொண்டமை அநுரகுமார திஸாநாயக்காவுக்கு மகிழ்ச்சியாக காணப்பட்டது. கூட்டங்களில் அவர் மிகவும் சுவாரஸ்யமாகவும், சிரத்தையுடனும் உரையாற்றினார்.

இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் தலைவர்கள் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான பொதுக் கூட்டங்களை நடத்தி இருக்கின்ற நிலையில், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஏனைய கட்சிகளும் இன்னும் எந்தவொரு கூட்டத்தினையும் நடத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி ஆகியவற்றின் கூட்டங்களில் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டமையை அவதானிக்கின்றபோது, முஸ்லிம் வாக்காளர்கள் முஸ்லிம் கட்சிகளை விட்டும் தூரமாய் போகின்றார்களா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகின்றது.

முஸ்லிம் கட்சிகளின் நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் மிகப்பெரிய அளவில் அதிருப்தியுடன் இருக்கின்றனர். தேர்தல் காலங்களில் மக்களுக்கு வழங்குகின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை. தேர்தல் காலங்களில் ஆட்சியாளர்கள் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களை குறிப்பிட்டு வாக்குகளை பெற்றுக் கொள்வதும், தேர்தல் முடிவடைந்தன் பின்னர் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்வதும் முஸ்லிம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழக்கமான ஒன்றாகும்.

இவர்களின் இந்த நடவடிக்கைகளினால் அவர்கள் தனிப்பட்ட வகையில் பயன்களை அடைந்து கொண்டனலே அல்லாமல் முஸ்லிம் சமூகம் மட்டுமன்றி நாடு கூட எந்தப் பயனையும் பெற்றுக் கொள்ளவில்லை. ஆட்சியாளர்களுடன் ஒட்டிக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கி, அவர்களை ஒழுக்காற்று நடவடிக்கைகளில் இருந்து விடுவித்தமையும், கட்சியின் பதவிகளை வழங்கியதில் காட்டிய வேகத்தையும் பார்க்கின்ற போது மறுக்க முடியாத நாடகமாகவே தெரிகின்றது.

ஆயினும்,  பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்கி, உடனடியாக பதவியும் வழங்கியமை தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவாளர்களிடையே பலத்த விமர்சனங்களை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றன. சமூகம் சார்ந்த அல்லது கட்சியயுடன் தொடர்புடைய விவகாரங்களில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், பாராளுமளன்ற உறுப்பினரும் எதிரும் புதிருமாக அடிக்கடி செயற்படுவதும், விமர்சனங்களை முன்வைப்பதும், பின்னர் அதை மறந்து மன்னித்தோம் என்பதும், கட்சியை காப்பாற்ற வேண்டுமென்பதும், மன்னிப்பு கேட்டார்கள் என்று கதை கூறுவதும் கட்சியின் ஆதரவாளர்களை ஏமாற்றுகின்ற திட்டமிடப்பட்ட நாடகம் என்றே கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் தமக்கான செல்வாக்கை பரீட்சித்துப் பார்ப்பதற்கான ஒரு களமாகவும் உள்ளுராட்சி சபை தேர்தலை முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் பார்க்க வேண்டியுள்ளது.

மறுபுறத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷரப் அக்கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்கு உட்பட்டிருக்கின்றார். இந்நிலையில் அவரோடு நெருங்கி செய்யப்பட்ட ஆதரவாளர்கள் பலரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல கட்சிகளில் இணைந்து போட்டியிட்டும், செயற்பட்டும் கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் ஏனைய கட்சிகளிலும் போட்டியிடுகின்றார்கள். பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் நெற்கதிர் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாளராக செயல்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு தமக்கு நெருக்கமானவர்களை பல கட்சிகளிலும் பொத்துவில் பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடச் செய்து அவர்களை வெற்றி பெறச் செய்வதோடு, இறுதியில் சபையின் அதிகாரத்தை தன்வசப்படுத்திக் கொள்வதற்கும் சூட்சமான முறையில் திட்டமிட்டுச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு பல கட்சிகளிலும் போட்டியிடும் முஷரப்புக்கு நெருக்கமானவர்கள் இரவு வேளைகளில் சந்திப்புக்களை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் கட்சிகளின் நடவடிக்கைகள் இவ்வாறு இருக்கின்ற நிலையில் சஜித் பிரேமதாசவும், அநுரகுமார திஸாநாயக்கவும் எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களை முன்னிலைப்படுத்தி தமது ஆதரவுகளை அதிகரித்துக் கொள்வதற்கான செயல்பாட்டில் இறங்கி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் சஜித் பிரேமதாஸவிற்கும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் இடையே பலத்த போட்டியாக அமையலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. சிறுபான்மையினரின் வாக்குகளே ஜனாதிபதியை தீர்மானிக்கும் வாக்குகளாகவும் இருக்கப் போகின்றன.

எவ்வாறாயினும் உள்ளூராட்சி சபை தேர்தல் முஸ்லிம் கட்சிகள் நெருப்புக்கொள்ளியால் தலையை சொறியும் ஒன்றாக ஏற்படாமல் இருப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எம்.எஸ்.தீன்