பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களது உரிமைகளை கோரி சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து முன்னெடுக்கும் போராட்டத்திற்கு முல்லைத்தீவு மாவட்ட மக்களை ஆதரவு வழங்குமாறு முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி இன்று 1.30 அளவில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர் இன்று 75 ஆவது சுதந்திர தினத்தை இந்த அரசாங்கம் அனுஷ்டிகின்ற போதும் 75 வருட காலமாக தமிழ் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுத்து எந்தவித தீர்வுகளும் இன்றி அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைகள் காணி பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்தியில் எந்தவித தீர்வும் இன்றி வாழுகின்ற எமக்கு இந்த நாள் கறுப்பு நாள் என அனுஷ்டித்து வருகின்ற இன்றைய நாளிலே யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் மக்களினுடைய உரிமைகளை கோரி யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பு வரையான பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இந்த பேரணி இன்றைய தினம் கிளிநொச்சியிலே நிறைவடைந்து நாளை காலை பரந்தனிலிருந்து புதுகுடியிருப்பு வீதி ஊடாக முல்லைத்தீவை வந்தடைய இருக்கின்றது.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து மக்களையும் இந்த பல்கலைக்கழக மாணவர்களுடைய இந்த பேரணியிலேயே கலந்துகொண்டு எங்களுடைய தமிழ் மக்களினுடைய உரிமைகளுக்காக குரல் கொடுத்து இந்த போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேபோன்று நாளைய நாள் (05) போராட்டத்திலே முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரும் கலந்து கொள்வதற்காக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவரையும் இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் தங்களுடைய உறவுகளை கையளித்த வட்டுவாகல் பாலத்தடியிலே 11.30 மணிக்கு ஒன்று கூடுமாறு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.