ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்விக்காக குரல் கொடுத்து வந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பேராசிரியர் இஸ்மாயில் மஷால் (37). இவர் பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் கல்விக்காக அனுமதிக்கப்படாத தலிபான் அரசின் உத்தரவை கடுமையாக விமர்சித்தார். மேலும், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மேற்படிப்பு சான்றிதழை தொலைகாட்சிக் நேர்காணல் ஒன்றில் எரிந்தார். மேலும், வீதிகளில் நின்று புத்தகங்களையும் வழங்கி வந்தார்.
இந்த நிலையில், மஷால் கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார் என்ற புகாரில் தலிபன் அரசால் கைது செய்யப்பட்டார். கைதின்போது மஷாலை அதிகாரிகள் கடுமையாக தாக்கியதாக நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை தலிபான் அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர். மஷாலின் கைது ஆப்கானிஸ்தானில் உள்ள சமூக ஆரவலர்களிடத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களிலும், உயர் கல்வி பள்ளிகளிலும் பெண்கள் படிக்க இடைக்கால தடைக்கு தலிபான் அரசு உத்தரவிட்டது. தலிபான்கள் அறிவிப்பைக் கேட்டு, ஆப்கானிஸ்தான் பெண்கள் பலர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அவர்கள் அறிவித்தனர். எனினும், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது என்றும், பெண் கல்வி; பெண் சுதந்திரம் பேணப்படும் என்றும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்தனர். ஆனால், பெண்களின் உரிமையை தொடர்ந்து பறிக்கும் செயல்களில் தலிபான்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது கவனிக்கத்தக்கது.