தேர்வு அறையில் 500 மாணவிகளுக்கு நடுவில் அமர வைக்கப்பட்ட பிளஸ் 2 மாணவர் மயங்கி விழுந்து காயமடைந்தார். அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பிஹார் மாநிலத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 1-ம் தேதிதொடங்கியது. சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பொதுத்தேர்வை எழுதுகின்றனர்.
பிஹாரின் நாளந்தா மாவட்டம், சுதர்கர் பகுதியில் உள்ள ஆல்மா இக்பால் கல்வி நிறுவனத்தில் பயிலும் மணீஷ் சங்கர் பிரசாத் (17) என்ற மாணவருக்கு அதே பகுதியில் உள்ள பிரிலியண்ட் கான்வென்ட் பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டது. இதன்படி கடந்த 1-ம் தேதி அந்த மாணவர் தேர்வு மையத்துக்கு சென்றார்.
மிகப்பெரிய தேர்வு அறையில்500 மாணவிகளுக்கு நடுவே மாணவர் மணீஷ் சங்கர் பிரசாத்துக்கு இருக்கை அளிக்கப்பட்டது. அந்ததேர்வு அறையில் வேறு எந்த மாணவரும் இல்லை. இதை பார்த்ததும் பதற்றம் அடைந்த மணீஷ் அப்படியே மயங்கி கீழே விழுந்தார். இதில் மாணவரின் கை, கால், தலையில் காயம் ஏற்பட்டது. உணர்வற்று கிடந்த அவரை, தேர்வு மைய அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து மாவட்ட கல்வித்துறை அமைச்சர் கேசவ் பிரசாத்கூறும்போது, “விண்ணப்பத்தில் மாணவர் மணீஷின் பாலினம்தவறுதலாக குறிப்பிடப்பட்டிருப் பதால் மாணவிகளுக்கான தேர்வு மையத்தில் அவருக்கு அறை ஒதுக்கப்பட்டிருக்கிறது. தற்போது தவறு திருத்தப்பட்டு விட்டது” என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மாணவரின் உறவினர்கள் கூறும்போது, “யாரோ சிலரின் தவறால் மணீஷின் கல்வி பாதிக்கப்பட்டிருக்கிறது. அதிர்ச்சி காரணமாக அவருக்கு தற்போது குளிர் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அவர் தேர்வு எழுத முடியாத நிலையில் இருக்கிறார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்று தெரிவித்தனர்.