வணிகவரி வருவாய் ரூ.1.06 லட்சம் கோடியை தாண்டியது

97 0

தமிழகத்தில் வணிகவரித் துறை வருவாய் கடந்த ஆண்டின் மொத்தவருவாயைக் கடந்து, ஜனவரி இறுதியில் ரூ.1.06 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது என்று அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் சொந்த வரி வருவாயில், பதிவுத் துறை மற்றும் வணிகவரித் துறையின் பங்கு மிகவும் முக்கியமானது. அந்த வகையில், கடந்த ஜன. 24-ம் தேதி வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசியபோது, “வணிகவரித் துறையைப் பொறுத்தவரை ரூ.1,04,059 கோடி, பதிவுத் துறையில் ரூ.13,631 கோடி என மொத்தம் ரூ.1,17,690 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதேபோல, பதிவுத் துறையில் சீர்திருத்தங்களால் கடந்த ஆண்டைக் காட்டிலும் வருவாய் உயர்ந்துள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ஜனவரி மாத முடிவில் பதிவுத் துறை வருவாய் ரூ.14 ஆயிரம் கோடியைத் தாண்டி, ரூ.14,043 கோடியாக உயர்ந்துள்ளது.

இது முந்தைய நிதியாண்டின்மொத்த வருவாயான ரூ.13,914 கோடியை விட அதிகமாகும். அதேபோல, வணிகவரித் துறையின் வருவாயும் கடந்த ஆண்டு மொத்தவருவாயைத் தாண்டி பதிவாகிஉள்ளது. அதாவது, கடந்த நிதியாண்டில் வணிகவரித் துறையின் மொத்த வருவாய் ரூ.1,04,970.08 கோடியாகும்.

பத்திரப் பதிவு துறையை போல.. ஆனால், நடப்பு 2022-23-ம் நிதியாண்டில் ஜனவரி இறுதியில் வருவாய் ரூ.1,06,918 கோடியாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் பத்திரப் பதிவுத் துறையைப் போலவே, வணிகவரித் துறையும் சாதனை படைத்துள்ளதாக அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.