எந்த ஒரு நாட்டுக்கும் அடிபணிய தேவையில்லை: கிழக்கு மாகாண ஆளுநர்

123 0

எந்த ஒரு நாட்டுக்கும் நாங்கள் அடிபணிய தேவையில்லை என்று கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் 75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாணசபை ஏற்பாடு செய்திருந்த இஸ்லாமிய நிகழ்வு நேற்றைய தினம் (02.02.2023) திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் விஷேட பிரதிநிதியாக கலந்து கொண்டபோதே கிழக்கு மாகாண ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

கடந்த 2500ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்கள் சுதந்திரத்திற்கு வழங்கிய விடயங்களை மறந்து விடக்கூடாது. ஒரே நாடு ஒரு தாய் பெற்ற மக்களைப் போன்று ஐக்கியத்துடன் வாழ வேண்டும்.

நாம் எமது மதத்திற்கு எவ்வாறு மதிப்பளிக்கின்றோமோ அதே போன்று ஏனைய மதங்களையும் மதித்து கௌரவித்து மனிதாபிமானத்துடன் வாழ வேண்டும் எனவும் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இம்முறை 75ஆவது சுதந்திர தினம் அனைத்து மதங்களையும் ஒன்றிணைத்து சர்வமத வழிபாடுகளை நடாத்தி ஆசிகளைப் பெற்று அதன் மூலமாக அபிமானமிக்க நல்ல தேசமாக மாற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்த ஒரு நாட்டுக்கும் நாங்கள் அடிபணிய தேவையில்லை. சர்வதேச நாடுகள் எம்மை அவர்களுக்கு கீழே செயல்படக்கூடிய நாடாக மாற்ற முயற்சிக்கின்றார்கள்.

அதற்கு நாங்கள் இடம் அளிக்காமல் ஐக்கியமாக ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் எனவும் ஆளுநர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பீ.எஸ்.ரத்னாயக்கவின் தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் பீ.எச்.என்.ஜயவிக்ரம மற்றும் வாகன செயலாளர்கள் பிரதிப் பிரதமர் செயலாளர்கள். திணைக்கள தலைவர்களின் பங்கு பற்றுதலுடன் இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.