காணி கையளிப்பு நிகழ்வில் நான் பங்கெடுக்கப்போவதில்லை!

154 0

இன்று 3ஆம் வெள்ளிக்கிழமை பலாலியில் நடைபெறவுள்ளி காணி கையளிப்பு நிகழ்வில் தான் பங்கெடுக்கப்போவதில்லையென வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காணி கையளிப்பு கண்துடைப்பென தெரிவித்துள்ள அவர் யாழ்.குடாநாட்டில் இன்னும் 3000 ஏக்கர் தனியார் காணிகள் இராணுவத்தின் பிடியில் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.அவ்வகையில் தற்போது விடுவிக்கப்படும் நிலப்பரப்பு மிகக் குறைவு.அதிலும் குறிப்பாக வடமாகாணத்தில் 60ஆயிரம் ஏக்கர் அரச காணிகள் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. அவற்றினில் எதுவும் தற்போது விடுவிக்கப்படவுமில்லை.

அதேபோன்று ஓடுபாதை அமைப்பதற்கு இனி நிலம் எதுவும் வேண்டாம் என்று இந்திய அரசு எனக்கு முன்பே தெரிவித்திருந்தது. அப்படியானால், பலாலி விமான நிலையப் பகுதியில் இராணுவம் தொடர்வது விமான நிலையத்தின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக மட்டுமே இருக்கும். விமான நிலையத்தின் பாதுகாப்பு நோக்கங்களுக்காகத் தேவையான நிலத்தை விட அதிகமான நிலத்தை அவர்கள் தடுத்து வைத்துள்ளனர்.ஏன்? எனவும் சி.வி;.விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மிகக் குறைந்த காணிகளை மிகவும் தாமதமாக விடுவிக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள அவர் குடாநாட்டில் படைகளது ஆக்கிரமிப்பிலுள்ள காணிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டால் காணி விடுவிப்பு போன்ற விழாக்களில் நான் தவறாமல் பங்கேற்பேன் என்று எதிர்பார்க்கலாம் எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வலிகாமம்  வடக்கு பிரதேசத்தில் கடந்த 33 வருடங்களாக  இராணுவ கட்டுப்பாட்டில் காணப்பட்ட 108 ஏக்கர் காணி நாளைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்.மாவட்ட செயலரிடம் இராணுவத்தால் கையளிக்கப்படவுள்ளது.

காங்கேசன்துறை மத்தி ,மயிலிட்டி அன்ரனிபுரம் ,நகுலேஸ்வரம் பகுதிகளை சேர்ந்த காணிகளே நாளைய தினம் ஒப்படைக்கப்படவுள்ளது.