ஏறாவூர் பொலிஸ் பிரிவு சவுக்கடி கடலில் சடலொமொன்று கரையொதுங்கியது.
இச்சம்பவம் வியாழக்கிழமை மாலை இடம் பெற்றுள்ளதாக இப்பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை மாலை பாலமீன்மடு கடலில் மீன் பிடிக்கச் சென்ற சுவிஸ் கிராமம் திராய்மடுவை சேர்ந்த இருதயம் அன்டனி 41வயதுடையவர் படகொன்றில் சென்று மறுநாள் (31) காலை கரையை நோக்கி வரும்போது பாரிய அலையொன்றினால் படகு கவிழ்ந்து காணாமல் போயிருந்தார்.
குறித்த விடயமாக கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக காணாமல்போன அன்டனி என்பவரை தேடிய உறவினர்களுக்கு ஏறாவூர் சவுக்கடி கடலில் சடலொமொன்று கரையொதுங்கியிருப்பதை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அவரது மனைவி ‘சடலம் எனது கணவருடையது தான்’ என அடையாளம் காட்டினார்.
மரண விசாரணைகளை முன்னெடுத்த மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் பிரேத பரிசோதனைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை முடிவுற்றதும் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு பொலிஸாரை தெரிவித்தார்.