இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவெடுப்பார் – தேர்தல் ஆணையம்

125 0

இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரே முடிவு செய்வார் என்று இந்திய தேர்தல் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2022 ஜூலை 11-ல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்துள்ளனர்.

இந்நிலையில், வரும் 27-ம் தேதி நடைபெற உள்ள ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை சுட்டிக் காட்டி, இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக வேட்பாளரை அனுமதிக்கும் வகையில், வேட்புமனுவில் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமியின் கையெழுத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க வேண்டும். மேலும், ஆணைய இணையதளத்தில் அதைப் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, இபிஎஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில இடைக்கால மனு தாக்கல் செய்யப் பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையமும், ஓபிஎஸ் தரப்பும் பிப். 3-ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தி, விசாரணையை பிப். 3-ம் தேதிக்கு (இன்று) தள்ளி வைத்துள்ளனர்.