அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயலில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியுள்ள வீட்டை காலி செய்யும்படி ஆவடி வட்டாட்சியர் பிறப்பித்த நோட்டீஸை ரத்து செய்யக்கோரி கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 3 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.வைத்யநாதன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க, ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
பின்னர் மனுதாரர்கள் 10 மடங்கு மின் கட்டணம் செலுத்த தயாராக இருந்தால், வீட்டை காலி செய்ய பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், அதுதொடர்பாக மனு தாக்கல் செய்யவும் மனுதாரர்கள் தரப்புக்கு உத்தரவிட்டனர்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில், 10 மடங்கு மின் கட்டணம் செலுத்த தயாராக இருப்பதாகவும், குறிப்பிட்ட அந்த நிலம் பட்டா நிலம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், குறிப்பிட்ட அந்த நிலத்தை அளந்து ஆக்கிரமிப்புகள் உள்ளதா, இல்லையா என்பது குறித்து ஆவடி வட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.