நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா சனிக்கிழமை (04) கொழும்பு – காலி முகத்திடலில் கொண்டாடப்படவுள்ளது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் 6000 பாதுகாப்பு படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பு இடம்பெறவுள்ளது.
சனிக்கிழமை காலை 7 மணிக்கு சர்வமத வழிபாடுகளுடன் நிகழ்வுகள் ஆரம்பமானதையடுத்து , 7.30 க்கு படை வீரர்களின் மரியாதை அணிவகுப்பும் ஆரம்பமாகும்.
தொடர்ந்து 8.15 க்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முதல் பெண்மணி மைத்திரி விக்கிரமசிங்க நிகழ்வில் கலந்து கொள்வர். முற்பகல் 10.30 மணி வரை மரியாதை அணி வகுப்புக்கள் இடம்பெறவுள்ளன.
மரியாதை அணிவகுப்புக்களில் முப்படையினர் , பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் , ஓய்வு பெற்ற முப்படை வீரர்கள், அங்கவீனமுற்ற முப்படையின் முன்னாள் வீரர்கள், தேசிய மாணவர் படையணி என்பவற்றைச் சேர்ந்த 6410 படை வீரர்கள் பங்குபற்றவுள்ளனர்.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் உள்ளிட்ட 400 இராஜதந்திரிகள் கலந்துகொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவது இடை நிறுத்தப்பட்டிருந்தது. எவ்வாறிருப்பினும் 3 ஆண்டுகளின் பின்னர் இம்முறை தமிழிலும் தேசிய கீதம் பாடப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.
இதே வேளை சுதந்திர தினமான 04 ஆம் திகதி சம்பிரதாயபூர்வமாக இடம்பெறும் ஜனாதிபதியின் விசேட உரை நிகழ்த்தப்பட மாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. எனவே சனிக்கிழமை மாலை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘நமோ நமோ தாயே – நூற்றாண்டை நோக்கி அடியெடுத்து வைப்போம்’ என்ற தொனிப் பொருளின் கீழ் 75 ஆவது சுதந்திர தின வைபவம் இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.