ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையை மேற்கோள் காட்டி, அதானி குழுமத்திடம் செபி, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கை: அதானி குழுமம் பங்குச் சந்தையில் பல்வேறு முறைகேடுகளைச் செய்து, ரூ.17.80 லட்சம் கோடி மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டி, அமெரிக்காவைச் சேர்ந்தஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய் வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, அதானி குழுமத்தின் போலி நிறுவனங்கள் குறித்த புகைப்பட ஆதாரங்களையும் வெளியிட்டுள்ளது. மேலும், அதானி குழுமத்தின் மோசடி தொடர்பாக 88 கேள்விகளையும் ஹிண்டன்பர்க் எழுப்பியுள்ளது.
கருப்புப் பண ஒழிப்பு பற்றிபேசும் மத்திய பாஜக அரசு, தனக்கு நெருக்கமான நிறுவனத்தின் இந்த சட்டவிரோதச் செயல்களைப் பார்த்து கண்ணை மூடிக் கொண்டுஇருக்கிறதா? இந்தக் குற்றச்சாட்டுகளை பெயரளவில் விசாரிக்காமல், முழுமையாக இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரிக்குமா?
அதானி குழுமத்தின் பங்கில் 8 சதவீதத்தை, அதாவது ரூ.74,000கோடி பங்குகளை எல்ஐசி வைத்துள்ளது. மேலும், அதானி குழுமத்தின் கடனில் 40 சதவீதத்தை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) வழங்கி உள்ளது.
எனவே, அதானி குழுமம் முறைகேடு செய்து, தனது பங்கு மதிப்பைதன்னிச்சையாக உயர்த்தி, அவற்றை அடமானமாக வைத்து எஸ்பிஐ உள்ளிட்ட வங்கிகளில் கடன் பெற்றதா என்பது குறித்துஇந்திய ரிசர்வ் வங்கி விசாரணை நடத்த வேண்டும். இது உண்மையாக இருந்தால் எஸ்பிஐ உள்ளிட்டவங்கிகளின் நிதிநிலை பாதிக்கும்.
எனவே, பொதுநலன் கருதி செபி மற்றும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் ஆகியோர், அதானி குழுமத்திடம் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அறிக்கையில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.