மாகாண சபை முறைமையை எதிர்க்க மாட்டோம் !

259 0

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் நிலைப்பாடுகளுக்கு இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகிறது.

அரசாங்கத்தின் உறுதியான நிலைப்பாட்டை முரண்பாடற்ற வகையில் ஜனாதிபதி முன்வைத்தால் தேசிய பிரச்சினைக்கு தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்வோம்.தேசிய பிரச்சினை விவகாரத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு பொழுதுபோக்காக பார்க்கிறாரே தவிர அவரிடம் உண்மை நோக்கம் கிடையாது.

அரசியல் தீர்வு என்று குறிப்பிட்டுக் கொண்டு தமிழ் மக்களை ஏமாற்றும் சர்வக்கட்சி கூட்டத்தில் பங்காளியாக போவதில்லை.மாகாண சபை முறைமை தமிழ் மக்களின் உரிமையை பாதுகாக்கும் வகையில் உள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டோம் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலைவரம்,உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வழங்கிய நேர்காணல் வருமாறு,

கேள்வி ; நாட்டின் தற்போதைய சூழ்நிலைக்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது சாதகமாக அமையுமா?

பதில் ; உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நிச்சயம் இடம்பெற வேண்டும்.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் மக்களின் ஆதரவு அத்தியாவசிமானது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு மக்கள் ஆதரவு கிடையாது. அரசியலமைப்பு மறுசீரமைப்புடன் தான் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியும். ஆகவே தேர்தலை நிச்சயம் நடத்த வேண்டும்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பெறுபேறு அரசாங்கத்திற்கு எதிரானதாக அமையும். தமக்கு மக்களாணை இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கௌரவமான முறையில் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு சென்று மக்கள் விரும்பும் அரசாங்கத்தை தோற்றுவிக்க வாய்ப்பளிக்க வேண்டும்.

கேள்வி ; உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் எத்தனை ஆசனங்களை கைப்பற்ற எதிர்பார்த்துள்ளீர்கள்.

பதில் ; நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து உள்ளூராட்சிமன்றத் தொகுதிகளையும் கைப்பற்ற எதிர்பார்த்துள்ளோம். பாரம்பரியமான அரசியல் கட்சிகளுக்கு வாக்களித்ததன் பிரதிபலனை நாட்டு மக்கள் தற்போது அனுபவ ரீதியில் விளங்கிக் கொண்டுள்ளார்கள்.அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின் நாட்டு மக்கள் முதலில் மாற்றமடைய வேண்டும்.

ராஜபக்ஷர்களின் பலவீனமான அரசாங்கத்தை போராட்டத்தின் ஊடாக மக்கள் வீழ்த்தினார்கள்.போராட்டத்தின் நோக்கம் நிறைவேறவில்லை.ராஜபக்ஷர்களின் பாதுகாவலரான ரணில் விக்கிரமசிங்கவை பொதுஜன பெரமுனவின் 134 உறுப்பினர்கள் ஜனாதிபதியாக தெரிவு செய்தார்கள்.ஆகவே அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் ஒன்றிணைய வேண்டும்.

கேள்வி ; ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான சர்வக்கட்சி கூட்டத்தை ஏன் புறக்கணித்தீர்கள்.

பதில் ; தேசிய பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் விடயத்தில் அரசாங்கத்திற்குள் பரஸ்பர வேறுப்பாடு காணப்படுகிறது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மாறுப்பட்ட நிலைப்பாட்டில் உள்ளார்கள்.ஆகவே அரசியல் தீர்வு விவகாரத்தில் முதலில் அரசாங்கம் ஒரு நிலைப்பாட்டுக்கு வர வேண்டும்.

தேசிய பிரச்சினைக்கு தீர்வு தொடர்பில் அரசாங்கம் ஒன்றிணைந்து ஒரு இணக்கப்பாட்டை முன்வைத்தால் தேசிய பிரச்சினை தொடர்பிலான பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்வோம்.அதனை விடுத்து ஜனாதிபதியின் ஊடக காட்சிப்படுத்தலில் கலந்துக் கொள்வது பயனற்றது.

நல்லாட்சி அரசாங்கத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்காக அரசியலமைப்பு சபையை ஸ்தாபித்தார்.புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் 84 கூட்டங்கள் இடம்பெற்றன. குறைந்தபட்சம் புதிய அரசியலமைப்பு தொடர்பில் ஒரு வரைபை கூட அவர் சமர்ப்பிக்கவில்லை. இடைவிலகல் மற்றும் தாமதப்படுத்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் தந்திரமாகும்.

கேள்வி ; தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட வகையில் தீர்வு காண முடியாதா ?

பதில் ; தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு அரசியலமைப்பினால் மாத்திரம் தீர்வு காண முடியாது.அரசியலமைப்பில் மொழி உரிமையை உறுதிப்படுத்தி விட்டு நடைமுறையில் மொழி உரிமைகளுக்கு முரணாக செயற்படும் போது அரசியலமைப்பில் காப்பீடுகள் வழங்குவது கேள்விக்குள்ளாக்கப்படும்.

கேள்வி ; மாகாண சபை முறைமைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியது.தற்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்கின்றீர்களா?

பதில் ; மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட போது நாட்டில் அமைதியற்ற தன்மை காணப்பட்டது. அக்காலக்கட்டத்தில் சிங்கள அரசியல்வாதிகளுக்கும்,தமிழ் தலைமைகளின் இணக்கப்பாடான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்தியாவின் தேவைக்காகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால் தற்போது நிலைமை மாற்றமடைந்து விட்டது.தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காகவே மாகாண சபை முறைமை தற்போது உள்ளது. ஆகவே மாகாண சபை முறைமையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல எதிர்க்க போவதில்லை.

கேள்வி ; சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளால் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.பொருளாதார மீட்சிக்கு நாணய நிதியத்தை தவிர மாற்றுத்திட்டம் ஏதும் கிடையாதா?

பதில் ; பொருளாதார மீட்சிக்கு நாணய நிதியத்தை தவிர மாற்றுத்திட்டம் ஏதும் இல்லை என்ற ஜனாதிபதியின் மந்திரத்திற்கு நாங்கள் இணங்க போவதில்லை.2.9 பில்லியன் டொலர்களை கொண்டு பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.தேசிய மட்டத்தில் உற்பத்திகள் அதிகரிக்கப்பட வேண்டும்.பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் ஆதரவு அவசியம்,தமக்கான அரசாங்கத்தை தெரிவு செய்தால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண மக்கள் ஆதரவு வழங்குவார்கள்.