தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக இருப்பவர்கள் யார்?

85 0

அண்மையில் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவை சந்தித்த போது தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைவர் துறைகணேசலிங்கத்தினால் தெரிவிக்கப்பட்டதாக சில கருத்துக்கள் கடந்த 29ஆம் திகதி கொழும்பு ஊடகமொன்றில் வெளியிடப்பட்டிருந்ததாக ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் மேலும்,

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுவாக தமிழ் அரசியல் கைதிகளின் வழக்குகளில் சம்பந்தப்படுகின்ற சில தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக இருப்பதாக தெரிவித்துள்ளமையானது நழுவல் போக்கான பொறுப்பற்ற பதிலாகும்.

அரசாங்கத்தின் விருப்பமின்மையும், அதிகாரத்தின் வாயிலான அடக்கு முறையையும் பயங்கரவாதச் சட்டம் பல தசாப்தங்களாக முறைகேடாக பயன்படுத்துகின்ற தன்மையையும் மறைத்து உண்மைகளை வெளிப்படுத்தாமல் பிரச்சினையின் போக்கை வேறு திசைக்கு திருப்பி பிரச்சினைக்கு பதில் கூற கடப்பாடுடையவர்களாக தமிழரசியல் கைதிகளின் வழக்குகளை கையாளுகின்றவர்களின் பக்கமே திசை திருப்பிவிட்டு தமிழ் மக்களுக்குள்ளேயே சங்கடத்தையும் சந்தேகத்தையும் விதைத்து குழப்பத்தை தோற்றுவித்து தப்பித்துக்கொள்கின்ற முயற்சியாகும்.

ஒரிரு அரசியல்வாதிகளான சட்டத்தரணிகளே அரசியல் கைதிகளின் வழக்குக்களை கையாள்கின்றனர்.

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு வழக்குகளை கையாளுகின்ற சில தமிழ் அரசியல்வாதிகளான சட்டத்தரணிகளே தடையாக இருப்பதாக தெளிவாக தெரிந்திருக்குமாயின் அத்தகையோரின் பெயர் விபரங்களும் தெரிந்திருக்க வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு உண்மையிலேயே தீர்வு காணவேண்டும் என்ற இதயசுத்தியுடன் நிலைப்பாட்டில் இருப்பாரானால் உடனடியாக அவர் ஒரு பொறுப்புள்ள அமைச்சராக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு தடையாக இருக்கின்ற குறித்த நபர்களின் பெயர்களை அடையாளப்படுத்த வேண்டும்.

கடந்த நாற்பது தசாப்தங்களாக பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் அரசாங்கத்தால் போடப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகளை நான் எதிர் கொண்டிருக்கின்றேன்.

ஒரு நோயாளி சத்திர சிகிச்சையின் பின்னர் உயிர்பிழைத்துக்கொண்டால் எல்லோரையும் விட அதிக சந்தோசத்தை முதலில் அடைவது அந்த சத்திர சிகிச்சை செய்த நிபுணர் தான்.

அதே போன்று வழக்கு தொடுக்கப்பட்ட ஒரு அரசியல் கைதி, அந்த வழக்கிலிருந்து விடுதலை பெறுவாராயின் அதிக சந்தோசத்தை உணர்வதும், வெளிப்படுத்தவதும் அந்த வழக்கை கொண்டு நடத்திய சட்டத்திரணித்தான் என்பதை நான் எனது அனுபவத்தின் வாயிலாக புரிந்து கொண்டேன்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தமிழர்களுக்கெதிரான 2009 ஆண்டிற்கு முன்னர் தொடுக்கப்பட்ட வழக்குகளில் பெரும்பாலானவை வடக்கு, கிழக்கிற்கு வெளியே உள்ள நீதிமன்றங்களில் தொடுக்கப்பட்டன.

குறிப்பாக கொழும்பில் பெரும்பாலான வழக்குகள் தொடுக்கப்பட்டன.

கடந்த 2009ஆம் ஆண்டு யுத்த முடிவுக்குப் பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான வழக்குகள் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டன.

யுத்தகாலத்தில் மாத்திரமல்ல இப்போதுகூட உயிர் அச்சுறுத்தல் மிகுந்த நிலையில் எமது மக்களுக்கு எதையும் பொருட்படுத்தாமல் இப்போது வரையும் பெரும்பாலான வழக்குகளில் முன்னிலையாகி சட்டத்தரணி என்ற வகையிலும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவன் என்ற வகையிலும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்சவின் மேற்குறித்த பொறுப்பற்ற பதிலை வன்மையாக கண்டிப்பதோடு மிகவிரைவாக அவர் குறித்த நபர்களின் பெயர் விவரங்களை உடனடியாக பகிரங்கப்படுத்த வேண்டும்.

தமிழ் மக்களின் மீது உண்மையான பற்று கொண்ட எந்தவொரு தமிழ் சட்டத்தரணியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக ஒருபோதும் செயற்பட மாட்டார்கள் என்பதே துணிவுடன் நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

சில வேளை பயங்கரவாத சட்டத்தின் கீழ் அவர்களோடு தொடர்புபடாத சில அரசியல்வாதிகள் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு எதிராக செயற்படுவார்கள் ஆனால் அவர்களை மக்கள் பார்த்துக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.