தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொள்வேன்!

162 0

தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தின அணிவகுப்பில் கலந்துகொள்வேன் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் (30.01.2023) நடைபெற்ற ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் தெரிவிக்கையில்,

இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மான் சின்னத்தில் களமிறங்குகின்றோம். இதனுடைய முக்கியத்துவம் என்னவென்றால் மான் சின்னத்தில் முதன்முறையாக எமது வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் நடவடிக்கைகளின் போது. மக்களை எவ்வாறு கவர வேண்டும், மக்களுடன் எவ்வாறு இணைந்து செயற்பட வேண்டும் என்பது தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது. தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் தேவையான நேரங்களில் தம்முடன் இணைந்து செயற்படலாம்.

கடந்த காலங்களில் சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராசா போன்றோர் முக்கிய சந்தர்ப்பங்களில் இணைந்து பயணித்திருந்ததாக  சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுதந்திரதின கொண்டாங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்த சி.வி.விக்னேஸ்வரன், என்னைப் பொறுத்தவரை 1958 இல் சுதந்திர தின அணிவகுப்பு அணியில் இணைந்து கொண்டேன். அதற்குபின்னர் இதுவரை சுதந்திர தினங்களில் கலந்துகொள்வதில்லை.

ஏனெனில் தமிழர்களுக்கு சுதந்திரம் இதுவரை கிடைக்கவில்லை. இனியும் எமக்கான உரிமைகள் கிடைத்தால் மட்டுமே சுதந்திர தினங்களில் கலந்துகொள்ள முடியும்.

அத்துடன், சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்து மட்டக்களப்பு நோக்கி இடம்பெறவுள்ள பேரணியை வரவேற்றுள்ளார்.