நியூசிலாந்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக 3 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
“கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆக்லாந்து நகரில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏராளமான வீடுகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். அக்லாந்து விமான நிலையத்தில் வெள்ள நீர் புகுந்ததால் பயணிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.“ என்று நியூசிலாந்து நாட்டின் செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்றும், அக்லாந்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கால நிலை மாற்றம் காரணமாக பூமியின் வெப்ப நிலை 1.1 டிகி செல்சியஸாக அதிகரித்துள்ளது. 2040 ஆம் ஆண்டுக்குள் பூமியின் வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸாக அதிகரித்துவிடும் என்றும், வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை தாண்டினால் மிகப் பெரிய பேரழிவு ஏற்பட்டு மனித இனங்களும், பிற உயிரினங்களும் வாழ முடியாத கடினமான சூழல் உருவாகிவிடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர். கனமழை, வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவற்றுக்கு காலநிலை மாற்றமே காரணம் என்றும், கால நிலை மாற்றம் ஏற்படுவதைத் தடுக்க உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.