இளைஞர்களை கொண்ட மீளாய்வு ஆலோசனை சபை ஸ்தாபிக்கப்படும்

128 0

வ்வொரு பிரதேச சபைக்கும் அதன் எல்லைக்குட்பட்ட அந்தந்த கிராம சேவகர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளைஞர் ஆலோசனை சபையொன்றை தாபிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.

மேலும், அண்மைய மக்கள் போராட்ட காலப்பகுதியில் இளைஞர்களுக்கு ஆட்சியில் பங்குபற்றுவதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும், அதனை நனவாக்கும் வகையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ஹம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் சனிக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எதிர்க்கட்சி தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

ஒவ்வொரு பிரதேச சபைக்கும் அதன் எல்லைக்குட்பட்ட அந்தந்த கிராம சேவகர் பிரிவுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இளைஞர் ஆலோசனை சபையொன்று ஸ்தாபிக்கப்படும்.

குறித்த ஆலோசனை சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்படும். மேலும், உள்ளூராட்சி சபையின் பணிகள் முறையாக நடைபெறுகிறதா என ஆராய முடியும். இதன் மூலம் பிரதேச சபையில் மோசடி ஊழல் இலஞ்சம் ஒழிக்கப்படும்.

மேலும், உள்ளூராட்சி மன்றங்கள் இயங்கிவரும் வெளிநாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டு எமது நாட்டில் உள்ளூராட்சி மன்றங்களின் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று அவர்களும் ஒன்றே இவர்களும் ஒன்றே தாங்கள் வித்தியாசமானவர்கள் என மேளம் தட்டி குரல் எழுப்பும் சிலர் சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்தனர். மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலரை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு குறித்த தரப்பு அர்ப்பணிப்புடன் கூடிய பங்களிப்பை வழங்கினார்கள்.

சிலர் திருடர்களை பிடிப்பதாக கூறினாலும், எவ்வாறு பிடிப்பது என்று பிடிக்கும் முறையை கூறுவதாக இல்லை. திருடப்பட்ட வளங்கள் மற்றும் பணத்தை மீட்பதற்கான சட்டமூலத்தைபாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் ஐக்கிய மக்கள் சக்தி அதனை நிறைவேற்றும் என்று எதிர்க்கட்சி தலைவர் மேலும் தெரிவித்தார்.