“சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது”
இப்போது இரா.சம்பந்தன் என்ன பொறுப்பில் இருக்கிறார்?
சில ஊடகங்கள் இன்னமும் அவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்று கூறுகின்றன. இன்னும் சில, தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் என்கின்றன.
உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதற்கு தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்த பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புயலில் அகப்பட்ட தோணி போலத் தள்ளாடுகிறது.
அதன் நிலையை, அதன் பங்காளிகள் எனச் சொல்பவர்களால் கூட, திட்டவட்டமாக கூற முடியாதிருக்கிறது. ஏனென்றால் கூட்டமைப்பின் அமைப்பு முறை அவ்வாறானது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி, ரெலோவின் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் சபா. குகதாஸ் மற்றும் துணை மேயர் ஈசன் ஆகியோருடன் இணைந்து ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.
குத்துவிளக்குச் சின்னத்துடன், D என்ற ஆங்கில எழுத்து சிறிதாக எழுதப்பட்டு TNA என்பது பெரிதாக தெரியக் கூடிய பதாகை ஒன்று அவர்களின் பின்னால் கட்டப்பட்டிருந்தது.
தேர்தல் திணைக்களம் வெளியிட்டுள்ள அரசியல் கட்சிகளின் விபரங்களில், பித்தளை விளக்கு சின்னம் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி என்ற கட்சிக்குரியது.
அதன் செயலாளராக வேலாயுதம் நல்லநாதர் என்பவர் பெயரிடப்பட்டுள்ளதுடன், கட்சியின் தலைமையகம் பம்பலப்பிட்டி கொழும்பு முகவரியையும் கொண்டிருக்கிறது.
ஆனால், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி இப்போது, ஜனநாயகத்தையும் மறைத்துக் கொண்டு, தங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மக்கள் முன் அடையாளப்படுத்த முற்படுகிறது.
இவ்வாறான நிலையில் ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசுவாமி நடத்திய செய்தியாளர் சந்திப்பில், இப்போது இரா.சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறிய பின்னர், சம்பந்தனின் தலைவர் பதவி வெறிதாகி விட்டது என்று அவர் ஒரு நியாயத்தை முன்வைத்திருக்கிறார்.
தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியதாக ஒருபோதும் அறிவிக்கவில்லை என்பது முதல் விடயம்.
அவ்வாறான ஒரு விம்பத்தை குறிப்பாக ரெலோ மட்டும் தான் உருவாக்கி வருகிறது. புளொட் கொஞ்சம் அமைதியாகவே இருக்கிறது.
உள்ளூராட்சித் தேர்தலில் மட்டும் தனியாகப் போட்டியிடுவோம், பின்னர் இணைந்து ஆட்சியமைப்போம் என்பதையே தமிழ் அரசுக் கட்சி கூறியிருக்கிறது.
எந்தவொரு கட்டத்திலும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கவில்லை. அதைவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது வெறுமனே தேர்தலுக்காக உருவாக்கப்பட்ட கூட்டுக் கிடையாது.
தமிழ் அரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் தீர்மானத்தை எடுத்தது, எந்தளவு தவறோ, அதே அளவுக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்று கூறுவதும் தவறானதே.
ஆங்கிலத்தில் Tamil National Alliance என்பது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றே ஆரம்பித்ததில் இருந்து அழைக்கப்பட்டது.
ஆனால் தற்போது தங்களைத் தான் கூட்டமைப்பு என்று கூறுபவர்கள் போட்டியிடும் கட்சியின் பெயர் ஆங்கிலத்தில் Democratic Tamil National Alliance என இருந்தாலும், தமிழில் அதன் பெயர், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்றே தேர்தல் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
தமிழில் கூட்டமைப்பு, கூட்டணி என்பன ஒரே பொருளைக் கொடுத்தாலும், வேறுபட்ட சொற்கள்.
ஜனநாயகத்தை சிறிதாக்கி, அல்லது மறைத்து, கூட்டணியைக் கூட்டமைப்பாக்கி, TNA என்ற பெயரை தங்களுக்குரியதாக உரிமை கோருகிறது புதிய கூட்டணி.
தமிழ் அரசுக் கட்சி எவ்வாறு தேர்தலுக்காக கூட்டமைப்பின் பொது இலக்கை விட்டுத் தனியாக முடிவெடுத்ததோ, அதுபோலத் தான், அதன் பங்காளிகளும், புதுக் கூட்டாளிகளும், தேர்தலுக்காகவே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பயன்படுத்த முற்படுகின்றன.
ஒன்று மோதகம் என்றால், மற்றது கொழுக்கட்டை.
இவ்வாறான நிலையில் தான், இரா.சம்பந்தனின் கூட்டமைப்புத் தலைவர் பதவி வறிதாகி விட்டதாக கூறியிருக்கிறது ரெலோ.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பதிவு செய்யப்பட்ட கட்சியோ, அல்லது யாப்பு எதையும் கொண்ட கூட்டமைப்போ கிடையாது.
அது ஒரு மரபுவழி அமைப்பாகத் தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது. விடுதலைப் புலிகளாலேயே இரா.சம்பந்தன் முதலில் கூட்டமைப்பின் தலைவராக்கப்பட்டார்.
அதற்குப் பின்னர், கூட்டமைப்புக்கு ஒருங்கிணைப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் தலைவராகவும் இரா.சம்பந்தனே செயற்பட்டார். ஆனால் அந்த ஒருங்கிணைப்புக் குழுவும் அமைப்பு ரீதியானதாக இருக்கவில்லை. நெருக்கடிகள் வந்த போது மட்டும் அந்தக் குழு கூட்டப்பட்டது. ஆனால் தீர்வுகளைத் தருவதாக இருக்கவில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஆரம்பத்திலிருந்து, இருந்து வருகின்ற ஒரே கட்டமைப்பு அதன் பாராளுமன்றக் குழு தான்.
அவ்வப்போது பாராளுமன்றக் குழுக் கூட்டம் நடக்கும். அதில் எடுக்கப்படும் தீர்மானங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாது போனாலும், கூட்டமைப்பில் உருப்படியாக இருந்த ஒன்று பாராளுமன்றக் குழு தான்.
பாராளுமன்றக் குழுவின் தலைவராக 2001ஆம் ஆண்டில் இருந்து இரா.சம்பந்தனே இருந்து வருகிறார். தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி எடுக்கின்ற தீர்மானம் அது.
2020 பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்னரும், இரா.சம்பந்தனை கூட்டமைப்பின் 10 பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்று கூடித் தீர்மானித்திருந்தார்கள்.
இன்று வரை அதில் மாற்றம் இல்லை. தேர்தலுக்கான கூட்டில் குழப்பங்கள் வந்திருந்தாலும், பாராளுமன்றக் குழுத் தலைவராக இரா.சம்பந்தனே நீடிக்கிறார்.
அவரை பாராளுமன்றக் குழு கூடி பதவியில் இருந்து நீக்கினால் மாத்திரம், அவர் தலைவர் பதவியில் இருந்து வெளியேற்றப்படுவார். ஆனால் அது முடியாத காரியம்.
ஏனென்றால், பாராளுமன்றத்தில் கூட்டமைப்புக்கு இருக்கின்ற 10 ஆசனங்களில், 6 ஆசனங்களை தமிழ் அரசுக் கட்சி வைத்திருக்கிறது.
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் உள்ள தங்களைத் தான் உண்மையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று கூறுகின்ற ரெலோவுக்கும், புளொட்டுக்கும், 4 ஆசனங்கள் தான் இருக்கின்றன.
இந்த நிலையில், இரா.சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்க முடியாது.
ஆனால், இரா.சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இருந்தும், சுமந்திரனை, பேச்சாளர் பதவியில் இருந்தும் நீக்கி விட்டதாக இந்தப் புதிய கூட்டணியில் சேர்ந்து கொண்டுள்ள ஜனநாயகப் போராளிகள் கட்சியின் கதிர் அறிவித்திருக்கிறார்.
அதேவேளை, இரா.சம்பந்தன் தான் கூட்டமைப்பின் தலைவர் என்று அறுதியிட்டுக் கூறியிருக்கிறார் சி.வி.கே.சிவஞானம்.
இவ்வாறான நிலையில் ஊடகங்கள் மத்தியில் ஒரு பெருங் குழப்பம் தோன்றியிருக்கிறது.
இரா.சம்பந்தன் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரே தவிர, அவருக்கு அந்தக் கட்சியில் பொறுப்புகள் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் என்பது மட்டும் தான் உள்ளது.
அவரை வெறுமனே பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிடுவதா அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்று கூறுவதா?
எப்படிக் குறிப்பிட்டாலும், இரா.சம்பந்தனின் ஆதரவாளர்களுக்கும் சரி, அவரது எதிர்ப்பாளர்களுக்கும் சரி, அது உவப்பான விடயமாக இருக்காது.
ஏனென்றால், கூட்டமைப்பின் தலைவர் என்றால், புதுக் கூட்டணிக்கு கொதிப்பு வரும்.
வெறும் பாராளுமன்ற உறுப்பினர் என்று குறிப்பிட்டால், இவ்வளவு காலமும் தமிழர் விவகாரத்தை கையாண்ட மூத்த தலைவரை சிறுமைப்படுத்துவதாக அவரது ஆதரவாளர்கள் கொந்தளிப்பார்கள்.
எவ்வாறாயினும், கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் என்ற தகைமையை குறைந்தபட்சம் இந்த பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை சம்பந்தனிடம் இருந்து பறிக்க முடியாது என்பதே உண்மை.
கபில்