நான் மட்டும் அமெரிக்க அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா – உக்ரைன் போரை 24 மணி நேரத்தில் முடிவுக்குக் கொண்டு வந்திருப்பேன் என்று முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த 2020 ஆம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் ட்ரம்ப் தோல்வியுற்றார். இதனையடுத்து அமெரிக்காவின் பல பகுதிகளில் ட்ரம்ப்பின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் கலவரமாக வெடித்தது. இது அமெரிக்க வரலாற்றில் பெரும் கரும்புள்ளியாக கருதப்படுகிறது. அந்தப் போராட்டங்களின் போது ட்ரம்ப் சமூக வலைதளங்கள் வாயிலாக வெறுப்பை விதைத்ததாகக் கூறி பேஸ்புக், ட்விட்டர் போன்ற நிறுவனங்கள் அவருக்கு தடை விதித்தன. இந்தத் தடையை அடுத்து ட்ரம்ப் ட்ரூத் சோஷியல் என்று தனக்காக ஒரு பிரத்யேக சமூக வலைதளத்தையே தொடங்கினார்.
இந்த சமூக வலைதள பக்கத்தில் வெள்ளிக்கிழமை அவர் பதிவைப் பகிர்ந்தார். அதில், ”நான் மட்டும் அமெரிக்காவின் அதிபராக இருந்திருந்தால் ரஷ்யா உக்ரைன் போரே நடந்திருக்காது. அதையும் மீறி போர் மூண்டிருந்தால் அந்தப் போரை இவ்வளவு காலம் நீடிக்கவிடாமல் மத்தியஸ்தம் செய்து முடித்துவைத்திருப்பேன். அதுவும் 24 மணி நேரத்தில் போரை நிறுத்தியிருப்பேன். ஆனால் இப்போது மனித உயிர்கள் மதிப்பின்றி வீணாக பலியாகிக் கொண்டிருக்கின்றன” என்று பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே வியாழக்கிழமையும் ட்ரம்ப் உக்ரைன் போர் பற்றி இன்னொரு பதிவும் பகிர்ந்திருந்தார். அதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு ஒரு கோரிக்கை விடுத்திருந்தார். அதில் “ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள். அதைவிடுத்து உக்ரைனுக்கு இன்னமும் டாங்குகளை வழங்கினால் போர் அடுத்த கட்டத்திற்கே நகரும். அது அணுஆயுத போருக்கு வழிவகுக்கும். முதலில் டேங்குகள், பின்னர் அணுஆயுதங்கள் என்று வரிசை கட்டும். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள்” என்று கோரியிருந்தார். உக்ரைனுக்கு அமெரிக்கா 3 டஜன் M1 Abrams டாங்குகளை வழங்கும் என்று பைடன் நிர்வாகம் அறிவித்த நிலையில் ட்ரம்ப் இந்தக் கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.