வயது வந்தவர்களுக்கு மட்டும் என ஏ சான்று பெறும் திரைப்படங்களை சிறுவர்கள் பார்க்க அனுமதிப்பதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இதுதொடர்பாக மத்திய அரசு மற்றும் தணிக்கை வாரியம்பரிசீலித்து முடிவெடுக்க உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரஷ்னேவ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், “பல திரையரங்குகளில் ஏ சான்று பெற்ற படங்களுக்குசிறுவர்களையும் வயது வித்தியாசமின்றி அனுமதிக்கின்றனர். இவ்வாறு சிறுவர்களை ஏ படங்களுக்கு அனுமதிக்கக்கூடாது என ஏற்கெனவே மத்திய தணிக்கை வாரியம் எச்சரித்துள்ளபோதும் திரையரங்கு நிர்வாகத்தினர் வசூலைக் கருத்தில் கொண்டு சிறுவர்களை அனுமதிக்கின்றனர்.
இவ்வாறு சட்டவிரோதமாக சிறுவர்களை அனுமதிப்பது என்பது திரையிடுதல் சட்டத்தின் கீழ் குற்றம். எனவே மத்திய தணிக்கைத்துறை வாரியத்தின் வழிகாட்டுதல்களை திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், படத்தயாரிப்பாளர் உள்ளிட்டோர் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக மத்திய தணிக்கை வாரியம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு வாரியம் ஆகியவற்றுக்கு நான் அனுப்பிய கோரிக்கை மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்” என கோரிஇருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் கார்ட்டூன் படங்களைகூட 7 வயதுக்கு குறைவான சிறுவர், சிறுமியர் பார்க்கஅனுமதிக்கக்கூடாது என விதிஉள்ளது. ஆனால் இப்போதெல்லாம் வீடுகளில் சிறு குழந்தைகள்கூட கொடூரமான கார்ட்டூன் படங்களை சரளமாக பார்க்கின்றனர் என வாதிடப்பட்டது.
அப்போது அரசு ப்ளீடர் பி.முத்துக்குமார் ஆஜராகி, இதுதொடர்பாக எந்த புகார் வந்தாலும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் நலனில் தமிழக அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது என்றார்.
அதையடுத்து நீதிபதிகள், ‘பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள், அடுத்த 3 மாதங்களுக்குள் தனியார் தொலைக்காட்சிகளில் வெளியாகி விடுகிறது. ஆனால் ஏ சான்று பெறும் திரைப்படங்களுக்கு சிறுவர்களை அனுமதிப்பது என்பது சட்டவிரோதமானது. எனவே இதுதொடர்பான மனுவை மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையும், மத்திய திரைப்பட தணிக்கை வாரியமும் பரிசீலித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்துள்ளனர்.