உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், ஒரு வாக்காளருக்கு குறைந்தபட்சம் 15 ரூபாவும், அரசியல் கட்சி ஒரு வேட்பாளருக்கு குறைந்தபட்சம் 08 ரூபா செலவிட வேண்டும் என ஆணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
செலவுகளை குறைத்து, ஊழல் மோசடியற்ற வகையில் தேர்தலை நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தியுள்ளது.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கும், அரசியல் கட்சி கட்சிகளின் செயலாளர்கள, பிரதிநிதிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (24) செவ்வாய்க்கிழமை தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் தொடர்பான சட்டமூலம் கடந்த 19 ஆம் திகதி வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து,சட்டம் சட்டமாதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பின்னணியில் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைளின் போது அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன தரப்பினர் செலவு செய்யும் நிதி தொகை தொடர்பில் வரையறைகளை பின்பற்றும் வகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர்,வாக்காளர் ஒருவருக்கு குறைந்தபட்சம் 15 ருபாவும்,அரசியல் கட்சி குறைந்தபட்சம் 08 ரூபா செலவிட வேண்டும் என ஆணைக்குழு முன்வைத்த யோசனைக்கு அரசியல் கட்சி செயலாளர்கள் இணக்கம் தெரிவித்தனர்.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உண்டு.உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தும் நடவடிக்கைகள் அனைத்தும் அரசியலமைப்புக்கு உட்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தும் திகதி ஊடகங்களில் மாத்திரம் அறிவிக்கப்பட்டுள்ளது,இருப்பினும் இதுவரை வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படவில்லை என அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
வேட்பு மனுத்தாக்கல் செய்யும் காலவகாசம் கடந்த 21 ஆம் திகதி நிறைவு பெற்றது. ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் மற்றும் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கல் தொடர்பான விபரங்கள்,தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களின் எண்ணிக்கை தொடர்பான விசேட வர்த்தமானி இவ்வார காலத்திற்குள் வெளியிடப்படும் என ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
தேர்தல் செலவுகளை இயலுமான அளவு குறைத்து உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்த ஆணைக்குழு விசேட வழிமுறைகளை வகுத்துள்ளது.பாரம்பரியமான தேர்தல் பிரசாரங்களை காட்டிலும் இம்முறை செலவுகளை குறைத்து தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுவது அனைத்து தரப்பினரது பொறுப்பாகும்.
செலவுகளை குறைத்து ஊழல் மோசடியற்ற வகையி;ல் தேர்தலை நடத்த அனைத்து அரசியல் கட்சிகளும்,சுயாதீன குழுக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அரசியல் கட்சிகள்,சுயாதீன குழுக்களிடம் வலியுறுத்தியுள்ளது.