தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டால் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு இதுவரை முன்னெடுத்த நடவடிக்கைகளை அவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் அரசியலமைப்பு பேரவை புதன்கிழமை (ஜன25) கூடவுள்ளது.
ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர் நியமனம் இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்படும் விடயம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமையவே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்பட்டோம்.20 ஆவது திருத்தம் இரத்து செய்யப்பட்டு 21 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நீதிச்சேவை ஆணைக்குழுவை தவிர ஏனைய ஆணைக்குழுக்கள அனைத்தும் கலைக்கப்படும்,தற்போதைய ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பதில் தலைவர்களாகவும்,பதில் உறுப்பினர்களாகவும் பதவி வகிக்கிறார்கள்.
சபாநாயகர் தலைமையில் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ள அரசியலமைப்பு பேரவை கூட்டத்தை தொடர்ந்து ஆணைக்குழுக்களுக்கு புதிய நியமனங்கள் இடம்பெறலாம்.
தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர்,உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டால் உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு இதுவரை முன்னெடுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
உள்ளூராட்சிமன்ற சபைகள் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
தேர்தலை பிற்போடும் அரசாங்கத்தின் நோக்கத்திற்கு சார்பாக தேர்தல்கள் ஆணைக்குழு செயற்படுகிறது என அரசியல் மட்டத்தில் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றது.
தேர்தலை விரைவாக நடத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உண்டு,தேர்தலை பிற்போட்டால் தேர்தல் முறைமை மீதான மக்களின் நம்பிக்கை முழுமையாக சிதைவடையும்.நாட்டு மக்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய கடப்பாடு ஆணைக்குழுவிற்கு உண்டு,ஆகவே எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி தேர்தலை நடத்த தடையில்லாத நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம் என்றார்.