நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி அதிகரிப்பு முறைமைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியாது.
துரதிஷ்டவசமாக சர்வதேச நாணய நிதியம் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் நாட்டுக்கு நாளை என்ற ஒன்று இருக்காது என்று அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வரி அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் கருப்பு வாரம் போராட்டம் தொடர்பில் செவ்வாய்கிழமை (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
தேர்தல் தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்படவில்லை. எனினும் இதற்கான செலவுகளை ஏற்பது இந்த சந்தர்ப்பத்தில் பாரிய சவாலாகும் என்பதை தேர்தல் ஆணைக்குழுவிற்கும் , நீதிமன்றத்திற்கும் அறிவித்துள்ளோம். வாக்குப் பெட்டிகளைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்து வசதிகளை வழங்குவதில் கூட பாரிய சிக்கல் காணப்படுகிறது.
துரதிஷ்டவசமாக சர்வதேச நாணய நிதியம் கடனுதவிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடாவிட்டால் இந்த நாட்டுக்கு நாளை என்ற ஒன்று இருக்காது. சர்வதேச மட்டத்தில் எம்மால் எந்தவொரு கொடுக்கல் வாங்கல்களையும் செய்ய முடியாது. சர்வதேசத்துடனான கொடுக்கல் வாங்கல்களுக்கு உரிய தொழிநுட்ப உத்தரவாதத்தை வழங்குவது சர்வதேச நாணய நிதியமாகும்.
சர்வதேச நாணய நிதியம் , ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கி உள்ளிட்டவற்றை நாடாமல் இந்த நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான வேலைத்திட்டம் எந்தவொரு அரசியல்வாதிகளிடமும் இல்லை. கடனை மீள செலுத்துவதற்கான வருமான வழியொன்றினை நாம் சமர்ப்பிக்காவிட்டால் , கடன்மறுசீரமைப்பினை மேற்கொள்ள முடியாது என்பதை நாணய நிதியம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.
அதே போன்று நாணய நிதியம் வழங்குவதற்கு உத்தேசித்துள்ள கடனுதவியும் கிடைக்கப் பெறாது. அவ்வாறு கடன் கிடைக்கப் பெறாவிட்டால் அபிவிருத்திகளுக்கான கடன்களையும் பெற்றுக் கொள்ள முடியாது. எனவே எமது வருமானத்தை அதிகரித்துக் கொள்ளவதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரி அதிகரிப்பிற்குள் அனைத்து தரப்பினரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
மாத வருமானம் 45 000 இற்கும் அதிகமாகக் காணப்படும் அனைவரிடம் வரி அறவிடுமாறு நாணய நிதியம் குறிப்பிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவையில் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் இதனை செய்ய முடியாது என்பதன் காரணமாகவே , ஒரு இலட்சத்திற்கும் அதிக மாத வருமானம் பெறுவோரிலிருந்து வரி அறவிடப்படுகிறது.
எனவே வரி திருத்தங்களில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டால் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி ஒருபோதும் கிடைக்கப் பெறாது. அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் இரு வாரங்களுக்கு மேல் நாட்டை நிர்வகித்துச் செல்ல முடியாது என்றார்.