எனது கணவரும் ஊடகவியலாளருமான பிரகீத் எக்னெலியகொடவை காணாமலாக்கியவர்களிற்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும், அநீதி இழைக்கப்பட்ட எனக்கும் என்போன்றவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என பிரகீத் எக்னெலியகொடவின் மனைவியான சந்தியா எக்னெலியகொட தெரிவித்தார்.
ஊடகவியலளர் பிரகீத் எக்னெலியகொடவை கடத்தி சென்று 13 வருடங்கள் கடந்துள்ள நிலையில் அவரது மனைவி சந்தியா எக்னெலியகொட முகத்துவாரம், காளியம்மன் சந்நிதானத்தின் முன்றலில் விசேட நினைவுப் பூஜையும், பிரகீத்தை தம்மிடமிருந்து பறித்துகொண்டவர்களுக்கு தகுந்த தண்டனை காளியம்மன் வழங்க வேண்டும் என்றும் இன்றைய தினம் காலை ஆலயமுன்றலில் வேண்டுதல் ஒன்றை நடத்தினார்.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“நான், கடந்த 13 வருடங்களாக நீதியைத் தேடி அலைகிறேன். கடந்த வருடம் இதே நாளில், நான் மொட்டை அடித்துக்கொண்டேன். அன்று முதல் இதுவரை நான் தொடர்ந்தும் மொட்டை அடித்துக்கொண்டே இருக்கின்றேன். காளி அம்மனிடம் அன்று நான் வேண்டிக்கொண்டவற்றில் சில தற்போது நிறைவேறியுள்ளது. ஆயினும், அவை முழுமை அடைய வேண்டுமாயின், அனைத்து வேண்டுதல்களும் கிடைக்கவேண்டும். இதற்காகவே, இன்றைய தினம் காளியம்மன் சந்நிதானத்தின் வெளியே பிரார்த்தனை செய்கின்றேன்.
எனது வேண்டுதல்கள் அனைத்தும், நிறைவேறியதன் பின்னர், எனது தலைமுடியை வளர்த்துக்கொண்டு காளியம்மனின் முகம் பார்க்கச் செல்வேன். அதாவது, பொய்யைக் கூறிக்கொண்டு திரியும் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்து, எனக்கு நீதி கிடைத்த அன்றுதான் நான் கோவிலுக்கு செல்வேன்.
ஆகவே, ராஜபக்ஷவினருக்கு தற்போது அளிக்கப்பட்டுள்ள தண்டனை தொடர்ந்தும் கிடைக்க வேண்டும். ராஜபக்ஷவினருக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என கடந்த வருடம் நான் மொட்டை அடித்து வேண்டினேன். அதன்படி, ராஜபக்ஷவினர், மக்களால் அடித்து துரத்தப்பட்டனர்.
அதேபோல், இந்த 13 ஆவது ஆண்டிலும் அவர்கள் தொடர்ந்தும் தண்டனை கிடைக்க வேண்டும். அவர்களுக்கு பூரண தண்டனை கிடைத்ததும், அநீதி இழைக்கப்பட்ட எனக்கும் என்போன்றவர்களுக்கும் நீதி நிலைநாட்டப்பட்டதும், நான் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு காளியம்மனை தரிசிக்க ஆலயத்திற்கு செல்வேன்” என்றார்.