நுவரெலியா – நானுஓயா , ரதெல்லை பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈட்டினை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன உட்பட அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் கொழும்பிலிருந்து கல்விச் சுற்றுலா சென்றிருந்த பஸ் ஒன்றுடன் வேன் மற்றும் முச்சக்கரவண்டியொன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளிட்ட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடு செலுத்தப்பட வேண்டும் என்பது தொடர்பில் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இது தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மேற்கண்டவாறு பதிவு செய்துள்ளார்.
அவரது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
‘நானுஓயாவில் இடம்பெற்ற விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. பிரதேச செயலாளரினால் விபத்து குறித்த முழுமையான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் நஷ்ட ஈட்டை வழங்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பிரதமர் தினேஷ் குணவர்தன உட்பட அமைச்சரவை இணக்கம் தெரிவித்தது.
விபத்து தொடர்பில் முழுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தேன்.’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.