வன்னிப் பல்கலைக்கழகம் விரைவில் உருவாக்கப்படல் வேண்டும் – டெனிஸ்வரன்

275 0
யாழ் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தினை வன்னிப் பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கு வவுனியா வளாக ஆசிரியர் சங்கம் எடுத்துள்ள முயற்சி காலத்தின் தேவையாகும் எனவும், அதற்க்கு தமது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் வடமாகாணத்தில் இன்னுமொரு பல்கலைக்கழகம் உருவாகுவது எமது மாகாணத்துக்கு பெருமை மட்டுமல்லாது இளம்சந்ததியினரை சிறந்த புத்திஜீவிகளாக உருவாக்குவதற்கு பெரும் பங்களிப்பினை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக இதன்மூலம் எமது வளம் சார்ந்த பட்டப்படிப்புக்களை எமது மாகாணத்தில் உருவாக்கி அவர்களுக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு பெரும் உதவியாக இது அமையுமெனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்மூலம் அதிகமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினை பெற முடியுமெனவும், எமது மாகாண மாணவர்கள் வேறு பல்கலைக்கழகங்களில் பயிலும்போது அதிகமான பணத்தினை தமது அன்றாட தேவைக்காக செலவிடுவதாகவும் அதுவே எமது பகுதியில் ஓர் பல்கலைக்கழகம் அமையுமானால் அது அனாவசிய செலவுகளை குறைப்பதாக அமையுமென்றும், இதன்மூலம் தலா வருமானம் குறைவாகவுள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பெரிதும் நன்மையடைவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே, வருகின்ற செவ்வாக்கிழமை 28.02.2017 அன்று நடைபெறவிருக்கும் வவுனியா வளாகத்தினை பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கு இலங்கையின் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களை வேண்டி நடைபெறும் ஊர்வலத்தில் வடமாகாண மக்கள் அனைவரும் இன, மத, மொழி வேறுபாடின்றி கலந்துகொள்ள வேண்டுமெனவும், குறிப்பாக கிராம மட்ட அமைப்புக்கள், தனியார் பேருந்து சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர், மீனவ சமூகத்தினர், மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது பூரண ஆதரவினை அளிக்குமாறு அமைச்சர் அவர்கள் கேட்டுநிற்கின்றார். மேலும் வன்னிப் பல்கலைக்கழகம் அமைவதே காலத்தின் தேவை எனவும் வலியுறுத்தி நிற்கின்றார்.