ஐ.நா சபை இலங்கை அரசாங்கத்திற்குக் கால நீடிப்பு வழங்கக் கூடாது-மனித உரிமை ஆர்வலர்கள்

270 0
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் ஐ.நாவின் பரிந்துரைகளைப் பின்பற்றாத இலங்கை அரசாங்கத்தின் ஏமாற்று வேலைகளுக்கு ஐ.நா சபை கால நீடிப்பு வழங்கி துணை நின்று பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கான நீதியை மறுக்க உதவக்கூடாது என மனித உரிமை ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்கள்.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் இன்று 7 வது நாளாகத் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள். இப்போராட்டத்தில் கலந்துகொண்ட மனித உரிமை ஆர்வலரான மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை அவர்கள் மேற்படி கருத்துக்களை வலியுறுத்தியிருந்தார்.

அவர் அங்கு மேலும் கருத்துத தெரிவிக்கையில், பாதிக்கப்பட்டவர்களான தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட வேண்டும் என்ற மனோ நிலையிலா இலங்கை அரசாங்கம் இருந்து வருகின்றது? இந்த மக்களின் நியாயமான போராட்டத்தைக் குழப்பும் வகையில் பல்வேறுபட்ட சக்திகள் செயற்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இலங்கையிலுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வை முன்வைப்பதற்கு இலங்கை அரசாங்கத்திற்குக் கால நீடிப்பு வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளதாகவும், கையொப்பமிட்ட கடிதம் அனுப்பியுள்ளதாகவும் பொய்யான பரப்புரைகளைச் செய்து வருகின்றார்கள். அதில் நானும் கால நீடிப்பு வழங்கப்பட வேண்டும் என்று கூறிக் கையொப்பமிட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இது முற்றிலும் பொய்யானது. இதன் பின்னணியில் யாரோ இருந்து செயற்படுகின்றார்கள். தயவு செய்து இப்படியான பொய்ப்பரப்புரைகளைச் செய்ய வேண்டாம். இந்த மக்களின் நியாயமான போராட்டத்திற்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும்.
எல்லா வகையிலும் பாதிக்கப்பட்ட நிலையில் தமது உறவுகளைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி ஏங்கி நிற்கும் இந்த மக்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும். இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றும் வகையில் யாரும் கால நீடிப்பு வழங்கச் சொல்லிக் கேட்க வேண்டாம். கால நீடிப்பு வழங்குமாறு இலங்கையிலுள்ள மனித உரிமைகள் ஆர்வலர்கள் கூறியுள்ளார்கள், கைபொப்பமிட்டுக் கடிதம் அனுப்பியுள்ளார்கள் எனப் பொய்ப் பரப்புரை செய்து மக்களைக் குழப்பிக் குற்றவாழிகளைக் காப்பாற்ற முயல வேண்டாம் என்று கருத்துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.