எமது கண்முன்னே இராணுவம் பிடித்துச் சென்ற எங்கள் பிள்ளைகள் எங்கே?

260 0

எமது கண் முன்னே அரச படைகளான இராணுவம் பிடித்துச் சென்ற எமது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படைக்க நல்லாட்சி அரசாங்கம் என்று கூறுகின்ற இந்த அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் மிகுந்த ஏக்கத்துடன் தெரிவித்துள்ளார்கள்.

தமது உறவுகளைப் பிடித்துச் சென்று காணவில்லை எனத் தற்போது கைவிரிக்கும் அரச படைகளும் அவற்றிற்குத் துணை நின்று செயற்படும் இலங்கை அரசும் தமது உறவுகள் எங்கே உள்ளார்கள்? என்ற விபரத்தை வெளியிடுமாறு கோரி இன்றுடன் 6வது நாளாகக் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால்  தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடாத்தி வருகின்றார்கள்.
இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால், தமது கண் முன்னே தமது உறவுகளைப் பிடித்துச் சென்ற இலங்கை இராணுவமும் இராணுவத் துணைப் படையினரும் தமது உறவுகளை எங்கே ஒழித்து வைத்துள்ளார்கள் என்ற விபரத்தை வெளியிடுவதற்கு நல்லாட்சி அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்.
எமது உறவுகள் எங்கே உள்ளார்கள் என்பதனைக் கண்டறிந்து வெளியிடுவதற்கு ஐ.நா சபை இனியும் காலம் கடத்தாது உரிய நடவடிக்கையை விரைவாக எடுக்க வேண்டும். எமது உறவுகள் எங்கே அரச படைகளால் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உடனடியாக வெளியிட வேண்டும். அதனை விடுத்துக் காலத்தைக் கடத்துவார்களாகவிருந்தால் எமது போராட்ட வடிவங்கள் எதிர்காலத்தில் மாறும் அதற்கான முழுப்பொறுப்பையும் இந்த அரசாங்கமும் ஐ.நா சபையுமேதான் ஏற்க வேண்டும். எனவும் இரவு பகலாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் கூறிக் கவலையும் விசனமும் தெரிவிக்கப்படுகின்றது.
காணாமல் ஆக்கப்பட்டோரது போராட்டத்தில் இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்துகொண்டு அந்த மக்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கான ஆறுதல் வார்த்தைகளையும் கூறி அவர்களது நியாயமான போராட்டத்திற்குத் தாம் தொடர்ந்தும் ஆதரவாக இருந்து குரல்கொடுத்து வருவதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோரது விடயத்தில் அரசு பாராமுகமாக இருந்து தொடர்ந்தும் மௌனம் சாதித்து வருவதாகவும் இவ்விடயத்தில் ஐ.நா சபை தகுந்த முறையில் தலையிட்டு இம்மனிதாபிமானப் பிரச்சினையைத் தீர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.