வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக தரமுயர்த்த அணிதிரள்வோம். – ஆனந்தன்

274 0
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை வன்னி பல்கலைக்கழகமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது வன்னிவாழ் மக்களின் நீண்டநாள் கோரிக்கை. இதுகுறித்து நாம் பாராளுமன்றத்திலும் தொடர்ந்து உரையாற்றி வந்துள்ளோம். 22.09.2016 அன்று பாராளுமன்றத்தில் பல்கலைக்கழக திருத்தச்சட்ட மூல விவாதத்தில் வன்னி பல்கலைக்கழமாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து உரையாற்றியபோது, உயர்கல்வி அமைச்சர் அதற்கான சம்மதத்தை தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில்  பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தி கவனயீர்ப்பு பேரணி நடத்தப்படவுள்ளது. வன்னிக்கென்று தனியான பல்கலைக்கழகம் அமைய வேண்டுமென்பதில் நாம் அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டுள்ளோம் என்பதை வெளிப்படுத்த வேண்டிய தருணம் இது. எமது எதிர்கால சந்ததிகள் எமது பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று உலகிற்கு எடுத்துக்காட்டாகத் திகழவேண்டும் என்பதே நம் அனைவரினதும் எதிர்பார்ப்பாகவும் வேண்டுதலாகவும் இருக்கின்றது.
ஆகவே, 28.02.2017 அன்று காலை 10.00 மணிக்கு வவுனியா குருமன்காட்டிலிருந்து ஆரம்பமாகும் கோரிக்கை பேரணியில் வன்னியைச் சேர்ந்த கல்விச் சமூகத்தினர், பல்கலைக்கழக ஆசிரியர் மாணவர்கள், பொது அமைப்புகள், தொழிற்சங்கங்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்பினர் என்று அனைவரையும் அடைகடலென அணிதிரளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
எமது இளைய சமுதாயத்தினருக்காக நாம் நடத்தும் வேள்வியில் அனைவரும் அர்ப்பணிப்புடன் அணிதிரள்வோம்.