24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிக்க வேண்டுமாயின் மின்கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் மின்கட்டண அதிகரிப்புக்கு தடையாக செயல்படுகிறார். இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளேன் என மின்சாரம் மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
2023ஆம் ஆண்டு முதல் 24 மணித்தியாலங்களும் தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கு மின்கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை இரு முறை அங்கீகாரம் வழங்கியது. இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அனுமதிக்கு அமைய மின்கட்டணம் அதிகரிக்கப்படும்.
மின்கட்டணத்தை அதிகரிக்கும் விடயத்தில் இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுக்குள் முரண்பாடு தன்மை காணப்படுகிறது.
பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் நான்கு உறுப்பினர்கள் மின்கட்டண அதிகரிப்பை பரீசலனை செய்துள்ள நிலையில் ஆணைக்குழுவின் தலைவர் மின்கட்டண அதிகரிப்புக்கு எதிராக செயற்படுகிறார்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் அரசியல் மற்றும் தனிப்பட்ட விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்கட்டண அதிகரிப்புக்கு தடையாக உள்ளார். இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளேன்.
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவரின் தனிப்பட்ட மற்றும் அரசியல் நோக்கத்துக்காக முழு நாட்டையும் நெருக்கடிக்குள்ளாக்க முடியாது. புதுப்பிக்கத்தக்க சக்தி வள பயன்பாட்டை விரிவுப்படுத்த அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.