பொருளாதாரம், ஜனநாயகம் இரண்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு

146 0

நாட்டின் பொருளாதாரம், மக்களின் ஜனநாயகம் ஆகிய இரண்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்துவோம் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவியபோதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

நாடு மிக மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள். ஒரு மாதத்துக்கு தேவையான எரிபொருள், மருந்து உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு நிதி ஒதுக்குவது பெரும் சிக்கல் நிலையை தோற்றுவித்துள்ள பின்னணியில் 10 கோடி ரூபா செலவுசெய்து உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது அவசியமானதா என்பது பொருளாதார நிபுணர்களின் பிரதான தர்க்கமாக உள்ளது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அரசியல் நோக்கத்துக்கு அமைய செயற்பட முடியாது. பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியல் காரணிகளை முன்னிலைப்படுத்திக் கொண்டு செயற்பட்டால் பிரச்சினைகள் தீவிரமடையுமே தவிர எதற்கும் நிலையான தீர்வு காண முடியாது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையில் அரசியல் ரீதியில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின், இரு பிரதான அரசியல் கட்சிகளும் அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தீர்மானித்தோம்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அரசாங்கத்தை தோற்றுவித்து குறுகிய காலத்தில் நிலையான தீர்வுக்காக கடுமையான திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம்.

பொருளாதார நெருக்கடி அனைவருக்கும் ஏதாவதொரு வழிமுறையில் தாக்கம் செலுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எரிபொருள், எரிவாயு ஆகியவற்றுக்கான வரிசை யுகம் முடிவுக்கு கொண்டு வந்தமை அரசாங்கம் பெற்றுக்கொண்ட பிரதான வெற்றியாகும்.

பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயார். ஆனால், நாடு என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாரா என்பது குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என ஒரு தரப்பினரும், தேர்தலை நடத்தக்கூடாது என பிறிதொரு தரப்பினரும் உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நிதியமைச்சின் செயலாளர் உயர்நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கும் தீர்மானத்தை முழுமையாக செயற்படுத்துவோம்.

நாட்டின் பொருளாதாரம் மக்களின் ஜனநாயகம் ஆகிய இரண்டையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உண்டு. பொருளாதாரம் ஸ்திரமாக இருந்தால் தான் அனைத்து விடயங்களையும் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்றார்.