2004ம் ஆண்டில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தனது உதயசூரியன் சின்னத்தையும் எடுத்துக் கொண்டு கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர் அதற்கு என்ன நிகழ்ந்ததோ, அதுவே வீடு சின்னத்தைக் காவிக்கொண்டு கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள தமிழரசுக் கட்சிக்கும் ஏற்படலாமென தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
மார்ச் மாத இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டிய உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தல், தமிழர் தரப்புடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்த தமிழர் பிரச்சனைத் தீர்வு பேச்சுவார்த்தை ஆகிய இரண்டுமே தொடர்ந்து பல வாரங்களாக அரசியல் அரங்கின் முக்கிய பேசுபொருள்களாக உள்ளன.
எக்காரணம் கொண்டும் தேர்தல் நிறுத்தப்படாது என அரசாங்க தரப்பு அடித்து அடித்து கூறினாலும் தேர்தல் நடைபெறுமா என்பது இன்றும் சந்தேகமாகவே உள்ளது.
தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அவசரமாக அரசாங்கம் நிறைவேற்றியிருப்பதன் ஊடாக தேர்தல் நடைபெறுமா என்ற சந்தேகம் எதிரணியினருக்கு மேலோங்கியுள்ளது.
தேர்தல் செலவுக்கு பணமில்லையென்று நிதியமைச்சு கைவிரிப்பதும், தேர்தல் செலவுக்காக பணம் அச்சிடப்பட மாட்டாது என்று அமைச்சர்கள் கூறி வருவதும், தேர்தலை இடைநிறுத்த நீதிமன்றுக்கும் நாடாளுமன்றத்துக்கும் சட்டப்படி முடியுமென்று எதிர்வு கூறுவதும், தேர்தல் தேவையற்றது – இதனை நிறுத்துவதே சரியென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் கருத்து வெளியிட்டிருப்பதும், பின்னால் வரும் யானையை அடையாளப்படுத்துகின்றன.
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தது போன்று பல அரசியல் கட்சிகளை கூறுபடுத்தியும், புதுப்புதுக் கூட்டணிகளை உருவாக்கியும் தேர்தல் அறிவிப்பு தனது கைங்கரியத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. தேர்தல் பரப்புரையில் தாம் ஈடுபடப்போவதில்லையென்ற ரணிலின் முற்கூட்டிய அறிவிப்பு, தேர்தல் தொடர்பான சந்தேகத்தை பலரிடமும் ஏற்கனவே ஏற்படுத்தியிருந்தது.
இந்தத் தேர்தல் முன்னெடுப்பினால் தமிழர் தேசியப் பரப்பில் எதிர்பார்த்ததும் எதிர்பார்க்காததுமான பல திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் இருபது வருடங்களுக்கு முன்னர் ஷநாடாளுமன்ற அரசியல்| பணிக்காக உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் பிளவுகளைக் கண்டு வந்தது. முதலில் தமிழ் காங்கிரஸ், பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப். என்பவை கழன்று போனதும், கொழும்பிலிருந்து இறக்குமதியான சுமந்திரனும், விக்னேஸ்வரனும் உள்நுழைந்ததும், பின்னர் இவர்கள் இருவருக்குமிடையே ஏற்பட்ட பிணக்கினால் விக்னேஸ்வரன் வெளியேறி புதிய கட்சியை உருவாக்கியதும் கடந்த பத்தாண்டுக்குள் இடம்பெற்றவை. சித்தார்த்தனின் புளொட் இக்காலத்தில் கூட்டமைப்பில் இணைக்கப்பட்டது இன்னொரு நிகழ்வு.
தற்போது, உள்;ராட்சித் தேர்தல் வேட்பாளர் தாக்குதல் செய்யும் செயற்பாடு எஞ்சியிருந்த கூட்டமைப்புக்குள் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டமைப்பின் பங்காளிகளான ரெலோவும் புளொட்டும் இதுவரை தமிழரசுக் கட்சியின் வீடு சின்னத்தில் போட்டியிட்டு வந்ததாலும், நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சி எம்.பி.யான சம்பந்தனின் தலைமையில் இயங்கி வந்ததாலும், சுமந்திரனின் செயற்பாடுகளை சம்பந்தன் கண்களை மூடியவாறு ஏற்றுக் கொண்டிருந்ததாலும், என்றோ ஒருநாள் கூட்டமைப்புக்குள் பிளவு வருமென எதிர்பார்க்கப்பட்டது இப்போது நடந்துவிட்டது,
கூட்டமைப்பின் தலைமைக் கட்சியாக விளங்கிய தமிழரசுக் கட்சி உள்;ராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுமென சம்பந்தனும் சுமந்திரனும் எடுத்த முடிவு (பெயரளவில் இது பொதுச்சபை முடிவென அறிவிக்கப்பட்டது) நீறு பூத்த நெருப்பாக புகைந்து கொண்டிருந்த ரெலோவுக்கும் புளொட்டுக்கும் தீர்க்கமான ஒரு முடிவெடுக்க வழிகொடுத்தது.
இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற சுரே~; பிரேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பையும், சிறீகாந்தா – சிவாஜிலிங்கம் ஆகியோரின் தமிழ் மக்கள் கட்சியையும், ஜனநாயக போராளிகள் அமைப்பையும் இணைத்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தங்களுக்கானதாக ரெலோவும் புளொட்டும் அறிவித்தன.
இவ்வேளையில் ஒரு கேள்வி எழுந்தது. தமிழரசுக் கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதா அல்லது ரெலோவும் புளொட்டும் கூட்டமைப்பிலிருந்து விலகி மற்றவர்களையும் இணைத்துக் கொண்டு தாமே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என அறிவித்தார்களா என்பதே இக்கேள்வி.
பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடி முடிவெடுக்காது தன்னிச்கையாக தமிழரசுக் கட்சி தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்தமையால், தமிழரசுக் கட்சியே கூட்டமைப்பிலிருந்து வெளியேறியது என்பதுதான் யதார்த்தம்.
மூன்று கட்சிகள் இணைந்த கூட்டமைப்பிலிருந்து தமிழரசு வெளியேறியதால், மிகுதி இரண்டும் – மூன்றிலிரண்டு என்ற பெரும்பான்மையைப் பெற்றன. அத்துடன் ஏற்கனவே கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய ஈ.பி.ஆர்.எல்.எஃபும் இவர்களுடன் இணைந்ததால், இவர்கள் தரப்பு நான்கில் மூன்று என்ற எண்ணிக்கையில் ஏகோபித்த பெரும்பான்மையானது. இவர்களுடன் தமிழ் மக்கள் கட்சி, ஜனநாயக போராளிகள் அமைப்பு என்பனவும் இணைந்து கொண்டதால் அரசியல் ஆலமரமாக இது அடையாளம் காணப்பட்டது.
எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற தேர்தல் பெயரை இந்த ஐவர் அணி தனக்காக சுவீகரித்துக் கொண்டது நியாயமானதாகவே பொதுவெளியில் உணரப்படுகிறது.
2004ம் ஆண்டில் ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி தனது உதயசூரியன் சின்னத்தையும் எடுத்துக் கொண்டு கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பின்னர் அதற்கு என்ன நிகழ்ந்ததோ, அதுவே வீடு சின்னத்தைக் காவிக்கொண்டு கூட்டமைப்பிலிருந்து வெளியேறியுள்ள தமிழரசுக் கட்சிக்கும் ஏற்படலாமென தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
இவ்வாறான நெருக்கடி வேளையில் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு சில காரியங்களை வெற்றிகரமாக பகிரங்கப்படுத்தியுள்ளார். இதுவரை காலமும் ஜெய்சங்கர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயங்களில் கடந்த வாரத்து பயணமே அர்த்தமுள்ள பயனுள்ள ஒன்றாக அமைந்ததாக அரசியல் வட்டாரங்கள் பார்க்கின்றன.
முக்கியமாக தம்முடனான பேச்சுவார்த்தைக்கு, தமிழ்த் தேசிய கட்சிகள் என்று கூறப்படும் தலைவர்கள் ஒவ்வொருவரையும் – எவரையும் தவறவிடாது அழைத்துள்ளார். வென்றவர் தோற்றவர் என்றில்லாமல், இலங்கை – இந்திய ஒப்பந்த 13வது திருத்தத்தை ஏற்பவர் ஏற்காதவர் என்று பிரிக்காமல், அனைவரையும் அரைமணித்தியால பேச்சுவார்த்தைக்கு அழைத்தது சொல்லாமல் சில விடயங்களைச் செய்ததை சொல்லிச் சென்றது. முக்கியமாக சுரே~; பிரேமச்சந்திரன், என்.சிறீகாந்தா, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட பெயர் குறிப்பிடப்பட வேண்டிய முக்கியஸ்தர்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு தங்களுடையது என்று இன்றும் உரிமைகோரும் தமிழரசுக் கட்சியினரை முன்னர் போன்று கூட்டமைப்பினர் என்று ஜெய்சங்கர் அழைக்கவில்லை. உண்மையான தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தாங்களே என்று கூற ஆரம்பித்திருக்கும் நான்கு கட்சிகளின் தலைவர்களையும் முதன்முறையாக ஜெய்சங்கர் ஒரே மேசைக்கு அழைத்துள்ளார். ஒற்றையாட்சிக்குள் தீர்வு கிடைக்காது என்று 13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்துவரும் கஜேந்திரகுமார் தமது கருத்தை நேரடியாகவே ஜெய்சங்கரிடம் தெரிவித்தது அவரது அரசியல் நேர்மையை எடுத்துக் காட்டுகிறது.
13வது திருத்தத்தின் கீழான மாகாண சபை முறையை அமல்படுத்துமாறு வலியுறுத்திய ஜெய்சங்கர், தீர்வைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பது தீர்வாகாது என்றும், ஏற்கனவே ஏற்றுக்கொள்ளப்பட்ட 13ம் திருத்தத்தின் கீழான அதிகாரப் பகிர்வை நடைமுறைப்படுத்த தமிழர் தரப்பு ஒன்றுபட்ட குரலில் வலியுறுத்த வேண்டுமென்று இச்சந்திப்பில் எடுத்துக்கூறியது முக்கியமான ஓர் அம்சம்.
13ம் திருத்த அதிகாரப் பகிர்வுக்கு இந்தியா ஆதரவு வழங்குமென்றும், இதனையே ஜனாதிபதி ரணிலைச் சந்தித்தபோது தாம் வற்புறுத்திக் கூறியதாகவும் ஜெய்சங்கர் தமிழர் தரப்புக்கு எடுத்துக் கூறினார்.
அதற்கும் அப்பால் சென்று, இந்தியப் பிரதமர் மோடியை ரணில் அழைத்திருப்பதையும் சொன்னதோடு, சம்பந்தனுக்கான அழைப்பையும் விடுத்தார். ஆனால் ஏனோ தெரியாது சம்பந்தன் அதனை புறக்கணித்து விட்டாராம். கடந்த வருடத்திலும் இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டபோது தமது கடவுச்சீட்டு காலாவதியாகிவிட்டது என்று சாக்குப்போக்கு கூறிய சம்பந்தன், இந்தத் தடவை என்ன சொன்னாரோ அல்லது சொல்லப் போகிறாரோ தெரியாது.
ஆனால், தமிழ்த் தேசிய கூட்டமைப்பை தங்களுக்கானதாக்கியுள்ள நான்கு கட்சியினரும் முக்கியமாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் இந்தியா சென்று முக்கிய தலைவர்களை சந்திக்க தயாராக இருப்பதாக ஊடக செவ்வியொன்றில் தெரிவித்திருப்பது இவர்களின் நிலைப்பாட்டை தெரியப்படுத்துகிறது.
ஜெய்சங்கரின் கடந்த வார இலங்கை விஜயம் சில விடயங்களில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஓரளவுக்கு தெளிவாக்கியுள்ளது:
1. 13வது திருத்தத்தின் கீழ் பூரண அதிகாரமுள்ள மாகாண சபை முறைமையை இலங்கை அரசு அமல்படுத்த வேண்டும்.
2. தமிழர் தரப்பு ஒன்றுபட்ட குரலில் இதனை இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
3. இந்த முயற்சிக்கு இந்தியாவின் முழுமையான ஆதரவு இருக்கும்.
இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கு வெவ்வேறு வகையாக உதவ முன்வந்துள்ள வேளையில், அதற்கு நிகராக இலங்கை – இந்திய ஒப்பந்தத்தை இலங்கை முழுமையாக அமல்படுத்த வேண்டுமென மோடி அரசு நிர்ப்பந்தம் செய்ய முடியும். அதனையே செய்வது போலவும் தெரிகிறது.
கூட்டமைப்பிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியதை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை தமது மறைசெயல் மூலமாக ஜெய்சங்கர் காட்டிச் சென்றுள்ளார். தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு உரிமை கோரியிருக்கும் நான்கு கட்சித் தலைவர்களையும் தனித்தனியாக கூட்டத்துக்கு அழைத்ததோடு, அவர்களுடன் தமிழரசு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியோரையும் அமர்த்தி இந்தியாவின் எதிர்பார்ப்பு, பங்களிப்பு ஆகியவைகளை ஜெய்சங்கர் எடுத்துக் கூறியிருப்பது அதிமுக்கியமானது.
இந்தச் சந்திப்புக்கு அழைக்கப்பட்ட மற்றொருவரான தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் இதில் பங்குபற்றாதது ஏன் என்று இதுவரை தெரியவில்லை. சிலவேளை தனியாக இந்தியா சென்று பேச்சு நடத்தும் எண்ணம் அவருக்கு இருக்கலாம்.
தமிழரசுக் கட்சி தனித்து இயங்குவதையும், கூட்டமைப்பிலிருந்து வெளியேறியதையும் கூட்டத்துக்கான அழைப்பு மற்றும் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் ஊடாக ஜெய்சங்கர் வெளிப்படுத்தினார் என்று கருதலாமா? நிச்சயமாகக் கருத இடமுண்டு.
பனங்காட்டான்