இரத்தினபுரி மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் 428 உறுப்பினர்களை தெரிவுசெய்யும் பொருட்டு கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் உள்ளடங்கலாக 128 குழுக்கள் போட்டியிடுவதாக இரத்தினபுரி மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி வசந்த குணரத்தின கூறினார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்த பின்னர் இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியளவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய வசந்த குணரத்தின மேலும் கூறியதாவது,
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடவென பதிவு செய்யப்பட்ட கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் அடங்கலாக 140 அணிகள் கட்டுப்பணம் செலுத்தியிருந்தன.
இவற்றில் 134 (கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள்) தரப்புக்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தன. இதில் 6 அணிகளின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
எஹெலியகொடை பிரதேச சபைக்காக சமர்ப்பிக்கப்பட்ட ஐக்கிய சமாஜவாதி கட்சியின் வேட்புமனு, குருவிட்ட பிரதேச சபைக்கான பெரட்டுகாமி சமாஜவாதி கட்சி மற்றும் சுயாதீன குழுவொன்றின் வேட்புமனு, பெல்மதுளை பிரதேச சபைக்கு முன்வைத்த சனநாயக மக்கள் முன்னனியின் வேட்புமனு, கலவான பிரதேச சபைக்கு முன்வைத்த பெரட்டுகாமி சமாஜவாதி கட்சியின் வேட்புமனு, கொலன்ன பிரதேச சபைக்கு தேசிய ஜனநாயக முன்னனி முன்வைத்த வேட்பு மனு என்பன நிராகரிக்கப்பட்டன என்றார்.