பொலிஸ்மா அதிபருக்கு தெரியாமல் சட்டத்தரணிகளுக்கு எதிராக வழக்கு!

98 0

பொலிஸ்மா அதிபர் மற்றும் பொலிஸ் சட்டப் பிரிவுக்கு தெரியாமல், சட்டத்தரணிகள் சிலருக்கு எதிராக, கொழும்பு – வாழைத்தோட்டம் பொலிஸார், கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முதல் தகவல் அறிக்கை (பீ அறிக்கை) சமர்ப்பித்து வழக்கொன்றினை தொடுத்துள்ள நடவடிக்கை குறித்து மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. 

பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இது தொடர்பில் தேசபந்து தென்னகோனிடம் விளக்கம் கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தொடர்புபட்ட பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழான வழக்கை, கொழும்பு மேலதிக நீதிவான் தரங்கா மஹவத்தவிடம் இருந்து மாற்ற சட்டமா அதிபர் எடுத்த நடவடிக்கை மற்றும் வழிமுறைக்கு எதிர்ப்பு வெளியிட்டு சட்டத்தரணிகள் கடந்த 18ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற கட்டடத் தொகுதி முன்பாக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இந்நிலையில், இது தொடர்பில்  உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டம் மற்றும் தேசிய சாலைகள் சட்டத்தின் கீழ் வாழைத்தோட்டம் பொலிஸார், கொழும்பு பிரதான நீதவானுக்கு சிரேஷ்ட சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க,  நுவன் போப்பகே, சேனக பெரேரா உள்ளிட்டோரின் பெயர் குறிப்பிட்டு பீ அறிக்கை  தாக்கல் செய்துள்ளனர்.

எனினும் இவ்வாறு சட்டத்தரணிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் பொலிஸ்மா அதிபரோ பொலிஸ் சட்டப் பிரிவோ அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அதன் அடிப்படையிலேயே மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாக கூறினார்.

வாழைத்தோட்ட பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஏற்கனவே பொலிஸ்மா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.