மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச சபைக்கான சுயேட்சை குழுவின் வேட்பு மனுவும், மன்னார் பிரதேச சபைக்கான ஒரு கட்சியின் வேட்பு மனுவும் முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகரும், மாவட்ட அரசாங்க அதிபருமான ஏ.ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவடைந்த நிலையில், நேற்று (21.01.2023) மாலை மன்னார் மாவட்டச் செயலகத்தில் ஊடக சந்திப்பு இடம் பெற்றது.
இதன் போது கருத்து கூறும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
மேலும், மன்னார் மாவட்டத்தில் ஒரு நகரசபை மற்றும் 4 பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமாக 51 கட்சிகளும், 3 சுயேட்சைக்குளுக்களும் கட்டுப்பணம் செலுத்தி இருந்தனர். இவற்றில் 41 கட்சிகளும், 3 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
மன்னார் நகர சபைக்காக 10 வேட்பு மனுக்களும், மன்னார் பிரதேச சபைக்காக 9 வேட்பு மனுக்களும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்காக 6 வேட்பு மனுக்களும், முசலி பிரதேச சபைக்காக 10 வேட்பு மனுக்களும், நானாட்டான் பிரதேச சபைக்காக 9 வேட்பு மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டது.
இவற்றில் முசலி பிரதேச சபையை சேர்ந்த சுயேட்சைக்குழு ஒன்றின் வேட்பு மனு முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளது. மன்னார் பிரதேச சபைக்கான ஒரு கட்சியின் வேட்பு மனு முழுமையாக நிராகரிக்கப்பட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபைக்கான ஒரு கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு கட்சியின் ஒரு வேட்பாளரும் நிராகரிக்கப்பட்டுள்ளார்.
மூன்று சுயேட்சை குழுக்களில் ஒரு சுயேட்சைக்குழு நிராகரிக்கப்பட்டுள்ளமையினால் ஏனைய இரண்டு சுயேட்சைக் குழுக்களில் மன்னார் நகர சபைக்கான சுயேட்சை குழுவிற்கு ‘கால்பந்து’ சின்னமும், மன்னார் பிரதேச சபைக்கான சுயேட்சை குழுவிற்கு ‘சங்கு’ சின்னமும் வழங்கப்பட்டுள்ளது.
இன்றைய வேட்புமனு கையளிப்பானது மிகவும் சுமூகமான முறையில் இடம் பெற்று இருந்தது. வேட்பு மனுக்களை சமர்ப்பித்தவர்கள் எங்களுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கி இருந்தார்கள்.வாக்கெடுப்பு தினமாக எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி (09-03-2023) என உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.