எமது மாவட்டச் செயலகங்களில் எடுக்கப்படும் தீர்மானங்களை எமது அரசியல்வாதிகளே நிறைவேற்றாத நிலையில் தெற்கு அரசியல்வாதிகளும் , அரசும் நிறைவேற்றுவதில்லை என நாம் எவ்வாறு குறைகூற முடியும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில் ,
வவுனியா மாவட்டச் செயலகத்தின் சேக்கிற் பங்களாக்களை வடக்கின் மூன்று அரசியல்வாதிகள் பிடித்து வைத்திருப்போர் அவற்றினை மீள ஒப்படைக்க வேண்டும் என கடந்த ஒக்டோபர் 25ம் திகதிய மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டபோதிலும் எவருமே இன்றுவரை மீள ஒப்படைக்கவில்லை என்பது மாவட்டச் செயலகத்தின் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்படுகின்றது.
இன்று வட மாகாணத்தில் முக்கிய விடயமாக உள்ள விடயம் நில விடுவிப்பே கானப்படுகின்றது. அந்த வகையில் பல இடங்களில் மக்களின் நிலங்களை படையினர் அபகரித்துள்ளதுபோல் அரச செயலக நிலங்களை அரசியல்வாதிகள் அபகரித்து வைத்துள்ளனர். குறிப்பாக படையினர் யுத்தகாலத்தில் தங்குவதற்காக கையகப்படுத்தியது போன்றே இவ் அரசியல்வாதிகளும் யுத்தத்தினைக் காரணம் காட்டி அபகரித்துள்ளனர் என்பதே வெளிப்பாடாகவுள்ளது.
அதாவது வவுனியா மாவட்ட செயலகத்திற்குச் சொந்தமான 3 சேக்கிற் பங்களாக்களை வடக்கின் 3 அரசியல்வாதிகள் கையகப்படுத்தி வைத்துள்ளபோதிலும் அவற்றினை இன்றுவரையில் மீளக் கையளித்தது கிடையாது. அவ்வாறு மீளக் கையளிக்காத கட்டிடங்களிற்கு அவர்கள் பயன்படுத்திய 10 , 15 ஆண்டுகளிற்கான வாடகைப் பணமும் இன்றுவரையில் செலுத்தியதே கிடையாது.
இதனை மாவட்டச் செயலகத்தில் கடந்த ஒக்டோபர் மாதம் 25ம் திகதி இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தினில் சுட்டிக்காட்டியபோது குறித்த கட்டிடங்களை மீளப்பெறுமாறு அமைச்சு அறிவுறுத்தியுள்ளதாக அரச அதிபரினால் அக் கூட்டத்திலேயே சுட்டிக்காட்டியதோடு இவற்றினை மூவரும் உடன் மீளக் கையளிக்க வேண்டும். எனவும் கோரப்பட்டது. இத் தீர்மானத்திற்கு அமைய மூன்று அரசியல்வாதிகள் மூவரும் குறித்த கட்டிடங்களை இன்றுவரையில் மீள ஒப்படைக்கவில்லை.
இவ்வாறு பங்களாக்களை இன்றுவரையில் கையகப் படுத்தியுள்ள அமைச்சர் ரிசாட் பதீயுதீன் , ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன், ஈ.பி.டீ.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஆகியோர் தமது பிடியில் உள்ள அரச கட்டிடத்தினை மீளக் கையளித்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதோடு பொதுச் சொத்துக்களை உரியவர்களிடம் ஒப்படைப்பதினில் முன் மாதிரியாகவும் நடந்து கொள்ள முன்வரவேண்டும்.
இவ்வாறு எமது தீர்மானத்தினை எம்மவர்களே நடைமுறைப்படுத்தாது இருந்துவிட்டு தென்னிலங்கை அரசியல்வாதிகள் நடைமுறைப்படுத்தவில்லை எனக் கூறுவதும் நாமே நிலங்கள் கட்டிடங்களை ஆக்கிரமித்து வைத்துக்கொண்டு பிறர் ஆக்கிரமித்து வைத்திருப்பதும் இரட்டை முகத்தின் வெளிப்பாடாக கருத இடமளிக்காது உடன் விடுவிக்க அரசியல் வாதிகளும் அவற்றினை கையகப்படுத்த அரச அதிபரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் . என்றார்.